இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக மன்கட் முறையில் தீப்தி சர்மா எடுத்த விக்கெட் அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி 118 ரன்கள் எடுப்பதற்கும் 9 விக்கெட்களை இழந்தது. கடைசி விக்கெட்டை விடாமல் சார்லோட் டீன் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென இருந்த நிலையில் சார்லோட் டீன் விக்கெட்டை எடுக்கமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். அந்த நேரத்தில் மன்கட் முறையில் தீப்தி ஷர்மாவால் சார்லோட் டீன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணி இந்த தோல்வியால் மிகுந்த வேதனையடைந்தது. இங்கிலாந்து கேப்டன் எமி ஜோன்ஸ் போட்டியிலேயே இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவுட் ஆன சார்லோட் டீன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டது அனைவரையும் உருக்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐசிசி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பந்து வீச்சாளர் பந்து வீசும்போது நான் - ஸ்ட்ரைக்கர் கோட்டை தாண்டி வெளியேறக் கூடாது. மீறினால் பந்து வீச்சாளர் அவுட் செய்யும்போது அது ரன் அவுட் முறையில் கணக்கெடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தது. மேலும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ம் தேதி முதல் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தது.
இந்தநிலையில், தீப்தி சர்மா செய்தது சரிதான் என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், அஸ்வின் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், தீப்தி சர்மா செய்தது தவறு என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வின் ட்வீட்:
எதற்காக இன்று அஸ்வினை ட்ரெண்ட் செய்கிறீர்கள். இன்றைய இரவின் பவுலிங் ஹீரோ தீப்தி ஷர்மா என்று கூறி அவரை டேக் செய்து இருந்தார். அவரை ஹீரோ என்று கூறியதன் மூலம் அஸ்வின் அவரை சப்போர்ட் செய்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
ஸ்டூவர்ட் பிராட் ட்வீட்:
மான்கட் விவாதம் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இருபுறமும் பல காட்சிகள். நான் தனிப்பட்ட முறையில் அது போன்ற ஒரு போட்டியில் வெற்றி பெற விரும்பவில்லை, மேலும், மற்றவர்கள் வித்தியாசமாக உணருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.