Wasim Slams Pakistan: உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தோல்வியுற்ற பாகிஸ்தானை அந்த அணி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்:
உலகக் கோப்பையில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணியின் மோசமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 49 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குவியும் விமர்சனங்கள்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே ஏழு முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி இருந்தாலும் ஒருமுறை கூட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான், உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம், நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து, சின்ன கத்துகுட்டி அணியிடம் தோல்வியடைந்துவிட்டதாக, பாக்ஸ்தான் அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காட்டமாக விமர்சித்த வாசிம் அக்ரம்:
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணியை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். தோல்வி தொடர்பாக பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் உடனான தோல்வி என்பது சங்கடமானதாக உள்ளது. இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது மிகப்பெரிய விஷயம். மைதானத்தில் பனிப்பொழிவு என்பது போன்ற காரணங்கள் முக்கியமல்ல. பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் மற்றும் உடற்தகுதியை பாருங்கள். கடந்த 3 வாரங்களாக இந்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த இரண்டு வருடங்களில் ஒரு உடற்தகுதி சோதனையை கூட இவர்கள் எதிர்கொள்ளவில்லை. தனிப்பட்ட பெயர்களை குறிப்பிட்டு பேசினால், அவர்களின் முகம் வாடிவிடும். இவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல் தெரிகிறது. இவர்களுக்கு உடற்தகுதி சோதனைகள் இருக்க வேண்டாமா? தொழில் ரீதியாக நீங்கள் பணம் பெறுகிறீர்கள், உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள். உங்களுக்கு என ஒரு குறிப்பிட்ட அளவுகோல் இருக்க வேண்டும். மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளராக இருந்தபோது அவர் அந்த அளவுகோல்களை வைத்திருந்தார். அது அணிக்கு பலனளித்தாலும், வீரர்கள் அவரை வெறுத்தார்கள். பீல்டிங் என்பது உடற்தகுதியைப் பற்றியது, அங்குதான் பாகிஸ்தான் பிரச்னைகளை எதிர்கொள்கிறது” என வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.