Irfan Rashid Dance: ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீர இர்ஃபான் பதான் ஆகியோர் மைதானத்தில் நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஆப்கானிஸ்தான் அபார வெற்றி:


சென்னையில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பான போட்டியில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான், 49வது ஓவர் முடிவில் இலக்கை எட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் மைதானத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியை உற்சாகப்படுத்தினர்.






உற்சாக நடனம்:


வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள், மைதானம் முழுவதும் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது, நட்சத்திர வீரரான ரஷீத் கான், அங்கு தொலைக்காட்சி நேரலையில் பேசிக்கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானிடம் சென்று மகிழ்ச்சியில் நடனமாடினார். இதை கண்டு உற்சாகமடைந்த பதானும் ரஷீத் கானுடன் சேர்ந்து கர்பா நடனமாடி, அவரை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.






இர்ஃபான் பதான் டிவீட்:


ரஷீத் கானுடன் சேர்ந்து நடனமாடிய புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இர்ஃபான் பதான், ”ரஷீத் கானுக்கு நான் வழங்கிய சத்தியத்தை பூர்த்தி செய்துவிட்டேன். அவர் எனக்கு வழங்கிய சத்தியத்தையும் பூர்த்தி செய்துவிட்டார்” என  குறிப்பிட்டுள்ளார். இதனையும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.


வரலாற்று வெற்றி:


நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் கண்டுள்ளது. அந்த இரண்டு வெற்றிகளுமே வரலாற்று சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. அதன்படி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை விழ்த்தி, நடப்பு உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்தது. அதைதொடர்ந்து, யாருமே எதிர்பாராத விதமாக வலுவான பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையகும்.