World Cup 2023 Points Table: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தனை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி:

சென்னையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் அரைசதம் விளாச, சதாப் கான் மற்றும் இஃப்திகார் ஆகியோர் தலா 40 ரன்களை சேர்த்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 282 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், குர்பாஸ், இப்ராஹிம், ரஹ்மத் மற்றும் ஹஸ்மதுல்லா ஆகிய முன்கள  வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் முதல் 3 பேர் அரைசதம் விளாச, 49 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். ஏற்கனவே நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்திய நிலையில், பாகிஸ்தானையும் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்தது. 

புள்ளிப்பட்டியல் விவரம்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
இந்தியா 5 5 0 10
நியூசிலாந்து 5 4 1 8
தென்னாப்ரிக்கா 4 3 1 6
ஆஸ்திரேலியா 4 2 2 4
பாகிஸ்தான் 5 2 3 4
ஆப்கானிஸ்தான் 5 2 3 4
வங்கதேசம் 4 1 3 2
நெதர்லாந்து 4 1 3 2
இலங்கை 4 1 3 2
இங்கிலாந்து 4 1 3 2

இதையும் படிங்க: ODI WC SA vs BAN: தென்னாப்பிரிக்காவை தாங்குமா வங்கதேசம்! மும்பையில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?

இங்கிலாந்திற்கு வந்த சோதனை:

போட்டியை நடத்தும் இந்தியா உடன் சேர்ந்து நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன. நேற்றைய தோல்வியுடன் சேர்த்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்து பாகிஸ்தான் 5வது இடத்தில் இருக்க, கடைசி இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முறையே 7,8 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி:

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். ஒருவேளை வங்கதேசம் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு செல்லக்கூடும்.