Washington Sundar: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
சொந்தப்பிய இந்திய அணி:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், மெல்போர்னில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 474 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர், ஜெய்ஷ்வாலை தவிர்த்து மற்ற முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
”நாங்க இருக்கோம்” வாஷிங்டன் - நிதிஷ் குமார்
ஒரு கட்டத்தில் இந்திய அணி 221 ரன்களை சேர்ப்பதற்குள் 221 ரன்களை இழந்து தடுமாறியது. இதனால், ஃபாலோ - ஆன் பெறக்கூடிய வாய்ப்பும் இருந்தது. இந்நிலையில் 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எந்தவிதமான அவசரமும் இன்றி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மெல்ல மெல்ல அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும் விளாசினர். இதனால், அணியின் ரஸ்கோரும் அதிகரித்தது. அதன்படி, ஃபாலோ-ஆனை தவிர்ப்பதற்கான 275 ரன்கள் என்பதை கடந்து, ”நாங்க இருக்கோம்” என்ற நம்பிக்கையை நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி ரசிகர்களுக்கு தந்தது.
வாஷிங்டன் சுந்தர் அபாரம்:
வாஷிங்டன் சுந்தர் 8வது விக்கெட்டுக்கு களமிறங்கியபோது, இனி ஒரு விக்கெட் வீழ்ந்தாலும் இந்திய அணி ஃபாலோ-ஆன் ஆவது உறுதி என்ற நிலையே இருந்தது. ஆனால், நிதிஷ் குமார் உடன் சேர்ந்து அணிக்கான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அவர் ஒருமுனையில் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து, அரைசதம் விளாசினார். அவரை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும், அரைசதம் விளாசினார். இந்த கூட்டணி 8வது விக்கெட்டிற்கு 127 ரன்களை சேர்த்து அணியை வலுவான நிலைக்கு மீட்டு கொண்டு வந்தது. வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்களை சேர்த்தபோது நாதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு தமிழக வீரர் அஷ்வின் ஓய்வுபெற்றபோது, அவரது இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை பூர்த்தி செய்யும் விதமாகவே, அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது அரைசதம் விளாசி தனது முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.