Nitish Kumar: நிதிஷ் குமாருக்கு பதிலாக முழு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
குழப்பம் ஏற்படுத்தும் நிதிஷ்குமார்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இக்கட்டான சூழலில் கூட இந்த தொடரில் அறிமுகமான நிதிஷ் குமார் அணிக்காக ரன்களை குவித்து வருகிறார். ரசிகர்களின் மனதையும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் இந்திய அணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக, முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு முழுமையான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளரும் அல்ல, அவரது இரண்டு திறமைகளால் போட்டிகளில் வெற்றியை ஈட்டித் தரமுடியவில்லை. மேலும் குழப்பத்தை உருவாக்குகிறது எனவும் பேசியுள்ளார்.
”கில்லிற்கு வாய்ப்பளித்து இருக்கலாம்”
நேற்றைய நாள் ஆட்டத்தின் போது பேசிய அவர், “ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான்காவது டெஸ்டில் சுப்மான் கில் பிளேயிங் XI இன் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் வாஷிங்டன் சுந்தர் உட்பட பேட்டிங் பகுதியைப் பற்றி நிர்வாகம் அதிக அக்கறை கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை, மேலும் ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா சிறந்த தேர்வாக இருந்திருப்பார்கள்” என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நடப்பு தொடரில் கே.எல். ராகுலுக்கு அடுத்த படியாக இந்திய அணியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரராக நிதிஷ் குமார் திகழ்கிறார். மெல்போர்னில் நடைபெற்றும் வரும் 4வது டெஸ்ட் போட்டியில் கூட, 34 ரன்களை எடுத்து பொறுப்புடன் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் இந்திய அணி ஃபாலோ-ஆன தவிர்க்க, நிதிஷ் குமார் தொடர்ந்து களத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.