Hardik Pandya: ஐபிஎல் தொடரின் போது கடும் எதிர்ப்புகளை சந்தித்த அதே மைதானத்தில், நேற்று ஹர்திக் பாண்ட்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.


வான்கடேவில் முழங்கிய ”ஹர்திக், ஹர்திக்..”


ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கான பாராட்டு விழா, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது கேப்டன் ரோகித் சர்மா, அணிய்ல் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா தொடர்பாக பேசுகையில், “ கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ஹர்திக் பாண்ட்யாவிற்கு தலை வணங்குகிறேன், கடைசி ஓவரில் எத்தனை ரன்கள் தேவைப்படுகிறது என்பதெல்லாம் பொருட்டல்ல. ஏற்படும் மாபெரும் அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருந்து, சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதன செய்த ஹர்திக்கை வாழ்த்துக்கிறேன்” என கூறினார். அப்போது வான்கடே மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் “ஹர்திக், ஹர்திக்” என முழக்கங்களை எழுப்பினர்.






திளைத்துப்போன ஹர்திக் பாண்ட்யா:


ஒட்டுமொத்த மைதானமும் ஹர்திக், ஹர்திக் என தனது பெயரை முழங்குவத கண்டு திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா, ரசிகர்களின் அன்பிற்கு தலைவணங்குவதை போன்ற செயலில் ஈடுபட்டார். அவரது முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. சில மாதங்களுக்கு முன்பே எந்த மைதானத்தில் ரசிகர்களின் வெறுப்பை எதிர்கொண்டாரோ, அதே மைதானத்தில் நேற்று ரசிகர்களால் நாயகனாக கொண்டாடப்பட்டார். 


ஐபிஎல் தொடரில் எதிர்ப்பு:


முந்தைய ஐபிஎல் தொடர்களில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக ட்ரேட் முறையில் மும்பை அணிக்குள் வந்தார். அதோடு, கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவின் ரசிகர்களும், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களும் கூட ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதே வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் ஹர்திக்கிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும், உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியதால் தற்போது அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


கடைசி ஓவரில் அசத்திய ஹர்திக்:


பார்படாஸில் நடந்த இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா, முதல் பந்திலேயே மில்லரை ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதன் மூலம், வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற வழிவகை செய்தார்.