Kohli Rohit: கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து உலகக் கோப்பயை உயர்த்திக் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.


கோலி, ரோகித் எனும் ஜாம்பவான்கள்:


ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய கிரிக்கெட்டின் இரு தவிர்க்க முடியாத  ஜாம்பவான்கள். இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கலாம், ஆனால் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காக காலம் முழுவதும் நினைவுகூறப்பட உள்ளனர். அவர்களின் சில சாதனைகள் அவர்களை கிட்டத்தட்ட அழியாதவர்களாக மாற்றியுள்ளன.  விளையாட்டின் சில முக்கிய வீரர்களுக்கு கூட ஒரு சிறந்த முடிவு கிடைப்பதில்லை. ஆனால், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்ற பிறகு, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் மற்றும் விராட் ஆகிய இருவருமே ஒரு சிறப்பான பரிசுடன் விடைபெறுகின்றனர். T20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 11 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஐசிசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.






விண்ணை பிளந்த முழக்கம்:


பார்படாஸில் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது. தொடர்ந்து நேற்று மாலை மும்பையில் திறந்தவெளி வாகனத்தில் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டது. அப்போது அவர்களை வரவேற்க சாலையின் இருபுறமும் அலைகடலென திரண்டு சுமார் 3 லட்சம் பேர் குவிந்தனர். அவர்களை நோக்கி, கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே சேர்ந்து கோப்பையை உயர்த்தி காண்பித்தனர். இதனை கண்டதும் உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது. ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கிய தருணத்தில், திறந்த வெளி பேருந்தில் சக வீரர்களுக்கு மத்தியில் நின்றபடி, கோலி மற்றும் ரோகித் கோப்பையை கையில் ஏந்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ரோகித் சர்மா பெருமிதம்:


பிரமாண்ட பேரணியை தொடர்ந்து வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது இந்தியாவிற்காக பட்டம் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில்,  கோப்பையை முழு நாட்டிற்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், "இந்த கோப்பை ஒட்டுமொத்த தேசத்துக்கானது. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களுடன் சேர்ந்து, 11 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்கள் ரசிகர்களுக்கு இதை அர்ப்பணிக்க விரும்புகிறோம்" என்று ரோகித் சர்மா கூறினார்.