தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வரும் இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் ஆடுகிறது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 4 போட்டிகள் கொண்ட டி20 தொடராக இது நடக்கிறது.


புது பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன்:


இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக மட்டும் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை பிசிசிஐ மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


அந்த தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் தொடருக்கு புறப்பட்டுச் சென்றுவிடும். அந்த அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளதால் தென்னாப்பிரிக்க தொடருக்கான பயிற்சியாளராக மட்டும் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலியா தொடர்:


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் வரும் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த தொடருக்காக சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.


நவம்பர் 24ம் தேதி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தொடங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வரும் நவம்பர் 10 அல்லது 11ம் தேதியில் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது. அந்த அணியினருடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் உடன் செல்கிறார். 


லட்சுமணன் இதுவரை எப்படி?


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லட்சுமணன் இந்திய அணிக்காக ஏற்கனவே பயிற்சியாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த  லட்சுமணன், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளராக இந்திய அணிக்கு பொறுப்பு வகித்துள்ளார். 49 வயதான லட்சுமணன் 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 17 சதங்கள் 2 இரட்டை சதங்கள், 56 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 781 ரன்கள் எடுத்துள்ளார். 86 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 சதங்கள் 10 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 338 ரன்களும் எடுத்துள்ளார்.  


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்குசிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், ராமன்தீப்சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங், விஜய்குமார் வைஷாக், ஆவேஷ்கான், யஷ் தயாள் இடம்பிடித்துள்ளனர்.