Rohit Kohli: ரோகித் மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, தொடர் தோல்விகள் காரணமாக பயிற்சியாளர் கம்பீர் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய அணி தொடர் தோல்வி:


நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட்ர் தொடரை இழந்தது மற்றும் உள்ளூரில் முதல்முறையாக நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதையடுத்து தொடர் தோல்விகள் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


மூத்தவீரர்களின் சலுகை ரத்து:


அதன்படி, கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா போன்ற,  மூத்த வீரர்களுக்கான 'விருப்பப் பயிற்சி' ஆப்ஷனை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. பாரம்பரியமாக, பயிற்சி அமர்வுகளில் ஒன்று வீரர்களுக்கு ஆப்ஷனாக வைக்கப்படுகிறது. சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு அமர்வில் பங்கேற்காமல் தவறவிடலம். இதன் மூலம் கடினமான வலைபயிற்சியில் ஈடுபடுவதில் இருந்து தங்களைக் விடுவித்து கொள்ளலாம். ஆனால், தற்போது அந்த முறை முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.


வீரர்களுக்கு கட்டாய பயிற்சி


இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு அறிக்கையின்படி , ஒவ்வொரு வீரரிடமிருந்தும் பயிற்சி அமர்வைத் தவறவிடுவதற்கான விருப்பத்தை அணி நிர்வாகம் பறித்துள்ளது. "அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பயிற்சிக்கு வீரர்கள் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது கட்டாயம் மற்றும் யாரும் அதைத் தவிர்க்க முடியாது" என்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தியா அணி நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்திருக்கலாம். இருப்பினும் வாஷ்-அவுட் ஆவதை தவிர்க்க மும்பையில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை மனதில் கொண்டு, இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் மும்பை டெஸ்டில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். எனவே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற உறுப்பினர்கள், அனைத்து பயிற்சி அமர்வுகளிலும் ஒவ்வொரு வீரரும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


புனே டெஸ்ட் முடிவடைந்த பின்னர், தொடரின் இறுதிப் போட்டிக்கு தயாராவதற்கு வீரர்கள் மீண்டும் அணி சேர்வதற்கு இரண்டு நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் மும்பைக்கு காரில் சென்றதாக கூறப்படுகிறது.