இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 499 போட்டிகளில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் கோலி, தனது 500வது சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கோலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 75 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்திலும் உள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூலை 20 முதல் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் போட்டியில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 182 பந்துகளில் 5 பவுண்டரிகள் உதவியுடன் 76 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஆக்டிவ் வீரர் கோலி மட்டுமே.
விராட் கோலி கடந்த 2008 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். கோலி இதுவரை 110 டெஸ்ட், 274 ஒருநாள் மற்றும் 115 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 48.88 சராசரியுடன் 8555 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 57.32 சராசரியில் 12898 ரன்களையும், T20 சர்வதேசப் போட்டிகளில் 4008 ரன்களையும் சராசரியாக 52.73 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.96 இல் எடுத்துள்ளார். விராட் கோலி மூன்று வடிவங்களிலும் சதம் அடித்துள்ளார். இவர் இதுவரை 75 சர்வதேச சதங்களையும், 131 அரைசதங்களையும் அடித்துள்ளார். இவரது கேரியர் அதிகபட்ச ஸ்கோர் 245 நாட் அவுட்டாகும்.
500 சர்வதேச போட்டியில் களமிறங்கும் விராட் கோலி:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி களமிறங்குவதன் மூலம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடும் 10வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதுவரை, அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனை முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் உள்ளது. அவர் தனது வாழ்க்கையில் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய 10 வீரர்கள் பட்டியல்:
- சச்சின் டெண்டுல்கர் - 664 போட்டிகள்.
- மஹேல ஜெயவர்தன - 652 போட்டிகள்.
- குமார் சங்கக்கார - 594 போட்டிகள்.
- சனத் ஜெயசூர்யா - 586 போட்டிகள்.
- ரிக்கி பாண்டிங் - 560 போட்டிகள்.
- மகேந்திர சிங் தோனி - 538 போட்டிகள்.
- ஷாஹித் அப்ரிடி - 524 போட்டிகள்.
- ஜாக் காலிஸ் - 519 போட்டிகள்.
- ராகுல் டிராவிட் - 509 போட்டிகள்.
- விராட் கோலி - 499 போட்டிகள்.