இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்று பயணம் சென்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலே ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணிமுதலில் பேட்டிங் செய்ய முன்வந்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷான் மதுஷ்கா, திமுத் கருணாரத்ன ஆகியோர் களமிறங்கினர். சொந்த மண்ணில் விளையாடுவதால் இலங்கை அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்தில் நிஷான் மதுஷ்கா சர்பராஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த மைல்கல்லை எட்டிய 19வது பாகிஸ்தான் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள்


பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச இலங்கை அணி வீரர்கள் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதன் விளைவாக தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை சற்று தடுமாறியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் சற்று உயர தொடங்கியது. அணியின் எண்ணிக்கை 185 ரன்களை நெருங்கிய போது ஏஞ்சலோ மேத்யூஸ் 109 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டர்களுடன் 64 ரன்களுக்கு அப்ரார் அகமது வீசிய பந்தில் சர்பராஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.


தனஞ்சய டி சில்வா அதிரடி ஆட்டம் 


மறுமுனையில் பொறுப்புடன்  விளையாடிய தனஞ்சய டி சில்வா சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். பாகிஸ்தான் பந்தை நேர்த்தியாக விளையாடிய தனஞ்சய டி சில்வா 157 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடம் 94 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறிக்கிட்டது.




 


மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது


ஆட்டம் தொடங்கி இரண்டாவது முறையாக மழை குறிக்கிட்டது. இதனால் வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இரண்டு மணி நேரமாக நிக்காமல் பெய்த மழையால்  65.4 ஓவரில்  ஆட்டம் நிறுத்தப்பட்டது. இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்களுக்கு எடுத்திருந்தது. 94 ரன்களுடன் தனஞ்சய டி சில்வா  ஆட்டமிழக்காமல் நின்றார். பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டும், நசீம் ஷா, அப்ரார் அகமது, ஆகா சல்மான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


இரண்டாம் நாள் ஆட்டம்


இரண்டாம் நாளான இன்று  தனஞ்சய டி சில்வாவும், ரமேஷ் மெண்டிஸ் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே ரமேஷ் மெண்டிஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் தனஞ்சய டி சில்வா சதம் அடிக்க, மறுபக்கம் பிரபாத் ஜயசூரியா (4), கசுன் ராஜிதா (8) ஆகியோர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டை தாரை வார்த்து கொடுத்து விட்டு சென்றனர். சிறப்பாக ஆடிய தனஞ்சய டி சில்வாவும் 122 ரன்களில் நசீம் ஷா வீசிய பந்தில் அவுட் ஆனார். இதனால் 95.2 ஓவரில் 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை.


பாகிஸ்தான் பேட்டிங்கில் தடுமாற்றம்


இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் சிறப்பாக தொடக்கத்தை அணிக்கு கொடுக்கவில்லை. இமாம்-உல்-ஹக் 1 ரன்னுக்கு கசுன் ராஜித பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க 221 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது பாகிஸ்தான். பின்னர் வந்த சௌத் ஷகீல் (56) மற்றும்  ஆகா சல்மான் (50) பொறுப்புடன் விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்து வருகின்றனர்.