இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடவர் கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா 'பி' டீமைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அதற்கு கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்-டை தேர்ந்தெடுத்து அவருக்கு கீழ் ஒரு அணியை உருவாக்கி உள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இருக்க மாட்டார்கள் என்பது ஏற்கனவே உறுதியான நிலையில், ருதுராஜிற்கு உலகக்கோப்பையில் இடம் இல்லாதது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.


ருதுராஜ் தலைமையிலான அணி


ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான முழு வலிமை கொண்ட பெண்கள் அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள நிலையில், ஆண்கள் அணியில் சிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, பிரப்சிம்ரன் சிங் மற்றும் ரிங்கு சிங் போன்ற சில அற்புதமான இளம் திறமைகள் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி உலகக் கோப்பை 2023, ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்குவதால், முழு பலம் கொண்ட இந்திய அணியை அனுப்ப முடியாத நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை டி20 வடிவத்தில் நடைபெறும். பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இளம் அணியை வழிநடத்துவது குறித்து மனம் திறந்து பேசினார். 26 வயதான அவர் தற்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக கரீபியன் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் ஒரு பகுதியாக உள்ளார்.



தங்கப் பதக்கம் வெல்வதே கனவாக இருக்கும்


"ஆசிய விளையாட்டு போட்டிகளில், தங்கப் பதக்கம் வெல்வதும், மேடையில் நின்று நாட்டிற்காக தேசிய கீதத்தைக் கேட்பதும்தான் இப்போதைக்கு என் கனவாக இருக்கும். இந்த வாய்ப்பு சிறப்பானது என்று நான் நினைக்கிறேன், மேலும் வீட்டில் உள்ள அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் கிரிக்கெட்டை விளையாடுவோம். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாட்டிற்காக பதக்கம் வெல்வதில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. இது நாம் வளரும் பருவங்களில் தொலைக்காட்சியில் பார்த்த ஒன்று, பதக்கம் வெல்வது உண்மையிலேயே மிகவும் சிறப்பானதாக இருக்கும்" என்று கெய்க்வாட் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Pen Monument: கடலில் இல்லையாமே.. கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க முதலமைச்சர் விருப்பம்?


பெருமையாக உணர்கிறேன்


சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் ஒரு பகுதியாக இருக்கும் கெய்க்வாட், இந்தியாவுக்காக ஒரு நாள் (ODI) மற்றும் T20I போட்டிகளில் ஏற்கனவே விளையாடியுள்ளார். "இந்தியாவுக்காக விளையாடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வு, இவ்வளவு பெரிய நிகழ்வில் அணியை வழிநடத்துவது தனிப்பட்ட முறையில் எனக்கும், என்னுடன் இருக்கும் அனைத்து அணி வீரர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்" என்று கெய்க்வாட் மேலும் கூறினார்.






ஆசிய விளையாட்டு போட்டிகள்


2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்பதற்கு ஜூலை மாதம் பிசிசிஐ அனுமதி வழங்கியது. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மிளிர்ந்த நட்சத்திரங்களான யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரும் போட்டிக்கான இந்திய வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (WK).