டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பை தொடருக்கான அணிக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி இடம்பெற்றுள்ளார். முகமது ஷமி ஏன் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். குறிப்பாக தனியார் விளையாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், “நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயம் முகமது ஷமியை எடுத்திருப்பேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவர் ஹர்ஷல் பட்டேலைவிட சிறப்பான பந்துவீச்சாளராக இருந்திருப்பார்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் முகமது ஷமியை அணியில் எடுக்காதது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்திய அணியில் ஏற்கெனவே பும்ரா, புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யா 5வது வேகப்பந்துவீச்சாளராக களமிறங்குவார். இதன்காரணமாக 6வது வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமியை எடுப்பதற்கு பதிலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை எடுக்க தேர்வுக்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது.
மேலும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய ஆடுகளங்கள் சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் அஷ்வின் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ரன்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் அவரை அணியில் சேர்க்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக முகமது ஷமி அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா.
காத்திருப்பு வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்
உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்களுக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்தது.
ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.