கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.


விராட் கோலிக்கு தொடர் ஓய்வு:


இந்த தொடரில் இளம் வீரர்களே இந்திய அணிக்காக ஆடி வருகின்றனர். மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட்கோலி, பும்ரா, ஷமி, சிராஜ், கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ஆட உள்ளது.


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. உலகக்கோப்பையை இந்திய அணி வென்று அதை ரோகித்சர்மா, விராட் கோலி கையில் ஏந்துவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த நிலையில், தற்போதைய தொடரிலும் அவர்கள் இருவரும் ஆடாத நிலையில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.


மார்ச் வரை ரெஸ்ட்:


அதாவது, 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஆனாலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி  வரலாற்றில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் ஆடுகிறது. அதன்பின்பு, இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த நாட்டுக்கு சென்று ஆட உள்ளது. அந்த தொடரில் விராட் கோலி ஆடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


ரசிகர்கள் அப்செட்:


உலகக்கோப்பைக்கு பிறகு வருங்கால இந்திய அணியை கட்டமைக்கும் நோக்கில் பி.சி.சி.ஐ. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது. விராட் கோலி தனது குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்தில் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி டிசம்பர் 26ம் தேதி முதல் 30-ந் தேதி வரை பாக்சிங் டே டெஸ்டிலும், ஜனவரி 3-ந் தேதி முதல் ஜனவரி 7-ந் தேதி வரை இரண்டாவது டெஸ்டிலும் ஆடுகிறது.


விராட் கோலியை போல, ரோகித்சர்மாவும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் குறைவாகவே இனி வரும் காலங்களில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 35 வயதான விராட் கோலி இதுவரை 292 ஒருநாள் போட்டிகளில் ஆடி 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13 ஆயிரத்து 848 ரன்கள் எடுத்துள்ளார். 115 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 37 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 8 ரன்கள் எடுத்துள்ளார். கோலி அடுத்த ஐ.பி.எல். தொடரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பைக்கு பிறகு விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு சர்வதேச அளவில் இந்திய அணி ஆடும் டி20 போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித்சர்மா ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.