சுவிட்சர்லாந்து : டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.


ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் பைனல்ஸில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 






டைமண்ட் லீக் பைனல்ஸில் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஒரு தவறான வீசுதலுடன் தொடங்கினார். தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீ தூரம் எறிந்து அசத்தினார். இதுவே இந்த தொடரில் இவர் வெற்றிபெற போதுமானதாக இருந்தது. 










அதைதொடர்ந்து, நீரஜ் சோப்ரா தனது மூன்றாவது முயற்சியில் 88 மீ எறிந்தும், தனது நான்காவது முயற்சியில் 86.11 மீட்டரும், ஐந்தாவது முயற்சி 87 மீ, கடைசி முயற்சி 83.6 மீ தூரம் எறிந்து அசத்தி டைமண்ட் லீக் பைனல்ஸில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம், டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்தார். 


ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் 86.94 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 83.73 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடம் பிடித்தார். 


முன்னதாக, கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றபோது நீரஜ் சோப்ராவிற்கு சிறிய இடுப்பு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை) இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 


24 வயதான இந்திய வீரர் நீரஜ், இப்போது ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் மற்றும் டயமண்ட் லீக் சாம்பியனாக உள்ளார். இவை அனைத்தையும் அவர் வெறும் 13 மாதங்களில் சாதித்துவிட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.