ஆசிய கோப்பையில் இருந்து இந்தியாவும், ஆப்கானிஸ்தான் அணிகளும் வெளியேறிய பிறகு இன்று இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் நேருக்கு நேர் மோதினர். இதில், விராட்கோலி அபார சதம் மற்றும் கே.எல்.ராகுலின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 212 ரன்களை குவித்தது. 213 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.




அந்த அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பெரும் தடையாக இருந்தனர். குறிப்பாக, புவனேஷ்வர்குமார் ஆப்கானிஸ்தானின் அதிரடி பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். அவரது முதல் ஓவரிலே ஷசாய், குர்பாஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த கரீம் ஜனத் 2 ரன்னிலும், நஜிபுல்லா ஜட்ரான் டக் அவுட்டாகியும் வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதில், முதல் 5 விக்கெட்டுகளை புவனேஷ்வர்குமார் கைப்பற்றினார்.






அதன்பின்னர், ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரியத் தொடங்கியது. ரஷீத் கான் 2 பவுண்டரிகள் விளாசிய நிலையில், 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் இப்ராஹிம் ஜட்ரான் நிதானமாக ஆடி வந்தார். அதிரடியாக ஆட முயற்சித்த முஜிப் உர் ரஹ்மான் 13 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் விளாசி அவுட்டானார். தினேஷ் கார்த்திக் வீசிய கடைசி ஓவரில் ஜட்ரான் 2 சிக்ஸர்களை விளாசினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகன் விருதை 122 ரன்கள் விளாசிய விராட்கோலி வென்றார்.




இந்திய அணி சார்பில் புவனேஷ்வர்குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 ஓவரை மெய்டனாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப்சிங், அஸ்வின், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறினாலும், தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றியுடன் வெளியேறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி 1021 நாட்களுக்கு பிறகு அட்டகாசமான சதத்தை அடித்து இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.