சமீபத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டெஸ்ட் தொடரில் நேருக்குநேர் மோதின. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது. இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. இந்த போட்டி விராட் கோலிக்கு 500வது சர்வதேச போட்டியாக அமைந்தது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கை விட விராட் கோலி சிறந்தவரா..?
இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை விட விராட் கோலியின் சாதனை சிறப்பாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுவரை விராட் கோலி 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி 25,582 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி 25035 ரன்கள் எடுத்திருந்தார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24874 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், இரு ஜாம்பவான் வீரர்களையும் விட விராட் கோலி, ரன்கள் மற்றும் புள்ளிவிவரங்களில் முன்னிலையில் உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை விராட் கோலி:
கடந்த 2008 ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 274 ஒருநாள் போட்டிகளிலும், 111 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
274 ஒருநாள் போட்டிகளில் 57.32 சராசரியில் 46 சதங்கள், 65 அரை சதங்கள் உள்பட 13776 ரன்கள் எடுத்துள்ளார், அதேபோல், 111 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 29 அரைசதம் உள்பட 8676 ரன்கள் எடுத்துள்ளார்.
500வது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி விராட் கோலி 500வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 500வது சர்வதேச போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார். ஏற்கனவே சர்வதேச அளவில் 9 வீரர்களும், இந்தியா சார்பில் டிராவிட், சச்சின் மற்றும் தோனி என 3 பேரும் 500வது போட்டியில் விளையாடியுள்ளனர். ஆனால், இவர்களில் யாருமே தங்களது 500வது சர்வதேச போட்டியில் சதம் மட்டும் அல்ல, ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
அதேநேரத்தில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குள் கோலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 8 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.