சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்களை வீழ்த்திய முதல் ஆண் கிரிக்கெட் வீரர என்ற சாதனையை மலேசிய வேகப்பந்துவீச்சாளர் சியாஸ்ருல் இட்ரஸ் படைத்துள்ளார். கோலாலம்பூரில் சீனாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆசியா பி குவாலிபையர் போட்டியின் தொடக்க ஆட்டத்தின் போது இந்த குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்ந்தது. 


 கோலாலம்பூரில் உள்ள ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பை ஆசியா பி தகுதிச் சுற்றின் தொடக்க போட்டியில், வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் சியாஸ்ருல் இட்ரஸ். இந்த சிறந்த பந்துவீச்சின் மூலம் சீனாவுக்கு எதிரான போட்டியில் மலேசியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 


32 வயதான சியாஸ்ருல் இட்ரஸ், இதுவரை 22 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இதுவே அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதன்மூலம், ஆண்கள் டி20யில் சிறந்த பந்துவீச்சு என்ற பெருமையை படைத்திருந்த நைஜீரிய வீரர் பீட்டர் அஹோவின் முந்தைய சாதனையை முறியடித்தார்.






முன்னதாக, அஹோ 5 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இவரை தொடர்ந்து, இந்திய அணி வீரர் தீபக் சாஹர் கடந்த 2019ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக 7 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். சாஹரை போன்றே கடந்த 2021 ம் ஆண்டு லெசோத்தோவிற்கு எதிராக உகாண்டா வீரர் தினேஷ் நக்ரானியும் 7 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 


சர்வதேச கிரிக்கெட்டில் 7 விக்கெட்கள் வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியல்: 



  • 7/3 - ஃபிரடெரிக் ஓவர்டிக் (நெதர்லாந்து) vs பிரான்ஸ் - 2021

  • 7/3 - அலிசன் ஸ்டாக்ஸ் (அர்ஜென்டினா) vs பெரு - 2022


ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு: 



  • 7/8 - சியாஸ்ருல் இட்ரஸ் (மலேசியா) vs சீனா, (கோலாலம்பூர், 2023)

  • 6/5 - பீட்டர் அஹோ (நைஜீரியா) vs சியரா லியோன் (லாகோஸ், 2021)

  • 6/7 - தீபக் சாஹர் (இந்தியா) vs வங்கதேசம் (நாக்பூர், 2019

  • 6/7- தினேஷ் நக்ரானி (உகாண்டா) vs லெசோதோ (கிகாலி, 2021)

  • 6/8 - அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) vs ஜிம்பாப்வே (ஹம்பாந்தோட்டா, 2012)

  • 6/10 - ஜேஜே ஸ்மித் (நமீபியா) vs உகாண்டா (விண்ட்ஹூக், 2022)


போட்டி சுருக்கம்: 


மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சீன அணி, 11.2 ஓவர்களில் வெறும் 23 ரன்களுக்குள் சுருண்டது. சீன அணியில் தொடக்க ஆட்டக்காரர் வெய் குவோ லீ அதிகபட்சமாக 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.


சீன அணிக்கு எதிராக இட்ரஸ் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 






குறைந்த இலக்கை விரட்டிய மலேசியா அணி 4.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. 


T20 உலகக் கோப்பை ஆசியா B தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நவம்பரில் நேபாளத்தில் நடைபெறும் ஆசிய பிராந்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறும், இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2024 நடைபெறும் T20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.