இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடரை போன்று மேஜர் லீக் கிரிக்கெட் என்ற தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் கீரன் பொல்லார்ட், எம்.ஐ நியூயார்க்கிற்கு கேப்டனாக தலைமை தாங்குகிறார். 


இந்தநிலையில், சியாட்டில் ஓட்காஸ் அணிக்கு எதிரான போட்டியில் எம்.ஐ நியூயார்க் விளையாடியது. அப்போது எம்.ஐ அணிக்காக பேட்டிங்கில் களமிறங்கிய கேப்டன் கீரன் பொல்லார்ட், மிக நீளமான 110 மீட்டர் சிக்சரை அடித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பொல்லார்ட்டின் பேட்டில் இருந்து வெளியேறிய பந்து மைதானத்திற்கு வெளியே வெகு தொலைவில் விழுந்தது. முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ நியூயார்க் அணியின் கேப்டன் 12வது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்த சிக்சரை அடித்தார். சியாட்டில் ஓர்காஸ் சார்பாக பந்துவீசிய கேமரூன் கேனன், 115 கிமீ வேகத்தில் ஒரு மெதுவான பந்தை வீசினார். அதை பொல்லார்ட் நன்றாக கணித்து, லெக் ஸ்டம்பை நோக்கி கடுமையாக சுழற்ற, பந்து நேராக மைதானத்திற்கு வெளியே விழுந்தது.






பொல்லார்டின் இந்த சிக்ஸின் வீடியோ மேஜர் லீக் கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகம் மூலம் பகிரப்பட்டது. மேஜர் லீக் கிரிக்கெட்டில் மிக நீண்ட சிக்ஸருடன் கீரன் பொல்லார்ட், முதலிடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் கேப்டன் பொல்லார்ட் 18 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் குவித்தார்.


போட்டி சுருக்கம்: 


சியாட்டில் ஓர்காஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய எம்.ஐ.நியூயார்க் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 194 ரன்களை எடுத்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்தார். இவரது பேட்டிங்கின்போது ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


ரன்களை விரட்டிய சியாட்டில் ஓர்காஸ் 19.2 ஓவரில் இலக்கை எட்டியது. அந்த அணி சார்பில், நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த ஹென்ரிச் கிளாசன், 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 110 * ரன்கள் குவித்து சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். பேட்டிங்கின்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. இது தவிர, 170 ஸ்டிரைக் ரேட்டில் பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் நௌமன் அன்வர் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்தார்.