Virat Kohli: டி-20 உலகக் கோப்பையில் களமிறங்கிய 3 போட்டிகளிலும், விராட் கோலி ஒற்றை இலக்கங்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.


சொதப்பும் விராட் கோலி:


டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரன் ஏதும் எடுக்காமால் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். டி-20 உலகக் கோப்பை 2024 போட்டியில் இதுவரை 3 போட்டிகளில் களமிறங்கினாலும், ஒன்றில் கூட அவரால் இரட்டை இலக்க ரன்களை எட்ட முடியவில்லை. அதன்படி, கனடா அணிக்கு எதிராக 1 ரன்னிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 4 ரன்களிலும் மற்றும் அமெரிக்க அணிக்கு எதிரான ரன் ஏதும் எடுக்காமலும் கோலி சொதப்பினார். டி20 உலகக் கோப்பையில் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும். டி20 போட்டிகளில் கோஹ்லிரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது ஆறாவது முறையாகும். கோலி கடைசியாக விளையாடிய நான்கு டி20 இன்னிங்ஸிலும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.


குவியும் விமர்சனங்கள்:


தனிப்பட்ட காரணங்களால் கோலி, தாமதமாகவே அமெரிக்கா சென்று உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைந்தார். இதனால் அவர் பயிற்சி ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து 3 போட்டிகளிலும் சொதப்பியதால், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கோலி மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட முடிகிறது, ஆனால் தேசத்திற்காக விளையாட முடியவில்லையா? பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் மட்டுமே கோலி ரன் குவிப்பார், நடுநிலையான மைதானங்களில் அவர் தொடர்ந்து சிரமப்படுகிறார் எனவும் பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


சுனில் கவாஸ்கர் நம்பிக்கை:


கோலியில் ஃபார்ம் தொடர்பாக பேசிய முன்னாள் விரர் சுனில் கவாஸ்கர், “மூன்று குறைந்த ஸ்கோரைப் பெற்றால், கோலி நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்று அர்த்தம் கிடையாது. சில நேரங்களில் நீங்கள் நல்ல பந்துகளை எதிர்கொள்வீர்கள். வேறு எந்த நாளிலும், இந்த பந்து வைட் அல்லது ஸ்லிப்பில் ஒரு பவுண்டரிக்கு சென்றிருக்கும். ஆனால்,  இன்று அப்படி நடக்கவில்லை. எனவே, கோலி மீது நாம் நம்பிக்கை காட்ட வேண்டும். விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்புவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் தொடரில் அசத்திய கோலி..! 


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும், கோலி தொடக்க வீரராகவே களமிறங்கினார். ஆனால், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி, 154 ஸ்ட்ரைக் ரேட்டில் 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 741 ரன்களை குவித்தார். இதன் மூலம் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனயை படைத்து, அதற்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்காக தொடக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடிவுகள் அதற்கு நேர் மாறாக அமைந்துள்ளன.