டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்தநிலையில், ஐசிசி தற்போது சர்வதேச டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும், ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதே நேரத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தரவரிசை பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

யார் யார் முன்னேற்றம்..? 

டி20 தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 837 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் பில் சால்ட் 800 புள்ளிகளுடன் இருக்கிறார். இதில் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 756 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளார். பாபர் அசாம் சமீபகாலமாக தனது மோசமான பேட்டிங் காரணமாக பல விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஒரு இடம் பின்தங்கி நான்காவது இடத்தில் இருக்கிறார்.

தரவரிசையில் பின் தங்கிய விராட் கோலி: 

டி20 தரவரிசையில் இந்திய அணியின் அனுபவ வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்திய டி20 அணியில் இருந்து நீண்ட நாட்களாக ரோஹித்தும், கோலியும் வெளியேறினர். இதன் காரணமாக ரோஹித் சர்மா 49வது இடத்தையும், விராட் கோலி 48வது இடத்தில் உள்ளனர். சமீபத்திய தரவரிசையில் 46-வது இடத்தில் இருந்த விராட் கோலி இரண்டு இடங்களை இழந்து 48வது இடத்திற்கு சென்றுள்ளார். 

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் முதலிடம்: 

டி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் அடில் ரசீத் 707 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திலும்,  ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் என்ரிக் நோர்கியா நான்காவது இடத்திலும், நான்கு இடங்கள் முன்னேறி, ஆப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி நான்காவது இடத்தில் உள்ளனர். 

தரவரிசையில் இந்திய அணிதான் முதலிடம்: 

தரவரிசை அணிகள்  புள்ளிகள்
1 இந்தியா 265
2 ஆஸ்திரேலியா 258
3 இங்கிலாந்து 254
4 வெஸ்ட் இண்டீஸ் 253
5 நியூசிலாந்து 248
6 தென்னாப்பிரிக்கா 247
7 பாகிஸ்தான் 241
8 இலங்கை 230
9 வங்கதேசம் 226
10 ஆப்கானிஸ்தான் 220