ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது பேசி வருவது விராட் கோலியின் 500வது சர்வதேச போட்டி குறித்து தான். தனது 500வது போட்டியில் சதம் விளாசிய முதல் கிரிக்கெட்டர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார் விராட். அதேபோல் இந்த ஒற்றை சதத்தால் பல்வேறு சாதனைகளை தவிடிபொடி ஆக்கியுள்ளார் விராட். இப்படியான செய்திகள் ஊடகங்களை நிரப்பிக்கொண்டு இருக்கையில் தற்போது மீண்டும் ஒரு செய்தி வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் சச்சின் தெண்டுல்கர். இவரது சாதனைகளை விரார் கோலி முறியடித்து வருகிறார். இந்நிலையில் சச்சின் செய்ததைப் போலவே ஒரு மைல் கல்லை எட்டியுள்ளார் விராட் கோலி. அதாவது விராட் கோலி தற்போது டெஸ்ட்டில் தனது 29ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்த சதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக குயின் பார்க் ஓவல் மைதானத்தில் அடித்துள்ளார். ஆனால் கடந்த 2002 ஆம் ஆண்டு சச்சின் தெண்டுல்கர் இதே மைதானத்தில் டெஸ்ட்டில் தனது 29 சதத்தை ஓவல் பார்க் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பதிவு செய்திருந்தார். இப்போது அதே மைதானத்தில் அதே அணிக்கு எதிராக அதே மைல்க்கல் எட்டப்பட்டுள்ளதால், இதனை பலரும் தேஜாவு என கூறி வருகிறனர். தேஜாவு என்பது ஏற்கனவே நடந்த ஒரு நிகழ்வு மீண்டும் நடப்பதுதான்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சாதனை பட்டியல்;
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனை பட்டியலில், ஜாக் காலிஷ் உடன் சேர்ந்து இரண்டாவது இடத்தை கோலி (12) பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 13 சதங்களுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். 11 சதங்களை விளாசி இருந்த டிவில்லியஸின் சாதனையையும் தகர்த்துள்ளார்.
டான் பிராட்மேன் சாதனைய சமன் செய்த கோலி:
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் கோலி 16வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார்.
5 ஆண்டுகளுக்குப் பிறகான சதம்:
5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 123 ரன்களை குவித்து இருந்தார். அதன்பிறகு தற்போது தான், மேற்கிந்திய தீவுகளில் அவர் சதம் விளாசியுள்ளார்.
அதிவேகமான 76 சதங்கள்:
சர்வதேச போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 76 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அதன்படி வெறும் 555 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதிக ரன்கள்:
இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி, 5வது இடத்தை தனதாக்கியுள்ளார் கோலி (8,642 ரன்கள்). இதுபோன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கோலிக்கு, இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.