BCCI Kohli Rohit: கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக, கோலி மற்றும் ரோகித் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளனர்.
கோலி, ரோகித் கம்பேக்:
இந்திய அணி கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். இந்நிலையில், வரும் 19ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் மூலம், இருவரும் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளனர். ஆனால், ரோகித் சர்மாவிற்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது, ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனால், இன்றைய சூழலில் இந்திய அணியின் முகமாக திகழும் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியதால், ஆஸ்திரேலியா தொடர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடிவாளம் விதித்த பிசிசிஐ:
வீரர்களின் தேர்வு குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், எதிர்காலத்தில் மெரிட் அடிப்படையில் கோலி மற்றும் ரோகித் அணியில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து . உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் ரோகித் மற்றும் கோலியும் கடின உழைப்பை செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததாக அகர்கர் சூசகமாக தெரிவித்துள்ளார். அதன்படி, இனி உள்ளூர் கிரிக்கெட்டில் சரியாக செயல்படாவிட்டால், 2027ம் ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையில் இடம்பெறுவது என்பது ரோகித் மற்றும் கோலிக்கு கனவாகவே போகக்கூடும்.
”இனி சலுகைகள் கிடையாது”
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த மற்றும் மிகவும் அவசியமான வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா திகழ்கின்றனர். இதன் விளைவாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு தொடரிலும் இந்த இரண்டு நட்சத்திர வீரர்களும் பங்கேற்றதால், உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது அவர்களுக்கு அவசியமானதாக இல்லை. ஆனால், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ 10 புள்ளிகள் கொண்ட உத்தரவை வீரர்களுக்கு பிறப்பித்தது. இதில், அனைவரும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வை அறிவித்துள்ளதால், கோலி மற்றும் ரோகித் நல்ல ஃபார்மில் தொடர்வதை உறுதி செய்ய, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து அவர்களுக்கு இனி எந்த விதிவிலக்கும் கிடைக்காது என கூறப்படுகிறது.
இந்த விதிகளை பின்பற்றி, உள்ளூரில் முதன்மையான 50 ஓவர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையில் கோலி மற்றும் ரோகித் விளையாடுவார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி அவர்கள் பங்கேற்றால், அது உள்ளூர் போட்டிகளுக்கு நல்ல ஊக்குவிப்பாக இருக்கும். 2025-26 விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளானது வரும் டிசம்பர் 24ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.