ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடி முடித்த இந்திய அணி தற்போது உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனையோ நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இந்திய அணியின் முகமாக ரசிகர்கள் மத்தியில் ஜொலிப்பது விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மட்டுமே ஆகும். 

Continues below advertisement


ஓரங்கட்டப்படும் ரோகித், கோலி:


இந்திய அணிக்காக ஆடிய நிரம்ப அனுபவம் கொண்ட வீரர்களான இவர்கள் இருவரும் டி20 போட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டுமே ஆடி வருகின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 




அதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒருநாள் போட்டிக்கான கேப்டன்சி ரோகித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இளம் வீரர் சுப்மன்கில்லிற்கு வழங்கப்பட்டது. ரோகித் சர்மாவும், விராட் கோலியும் உலகக்கோப்பை டி20 வெற்றியுடன் டி20 தொடரில் இருந்து தங்களது விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றனர். 


கம்பீர், அகர்கர் சதியா?


ஆனால், நியூசி, ஆஸ்திரேலியா தொடரில் சொதப்பியதால் அணி நிர்வாகம் அளித்த அழுத்தத்தால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதாக அப்போது தகவல் வெளியானது. இதையடுத்து, இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடுவார்கள் என்ற நிலை உருவானது. 2027 உலகக்கோப்பையை வெல்வதே ரோகித்சர்மாவின் கனவாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதிய நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரிடம் இருந்து கேப்டன்சியை இந்திய அணி நிர்வாகம் பறித்துள்ளது. 


இதன் பின்னணியில் கம்பீர், அகர்கர் இருப்பதாக கூறப்படுகிறது. திட்டமிட்டே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற வைக்க வேண்டும் என்பதற்காக இந்த சதி அரங்கேறுவதாகவும் ரசிகர்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 


ஆர்வம் காட்டவில்லை:


இந்த நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் அளித்துள்ள பேட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை.  இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக்கோப்பைக்கு  தயாராக முடியும் என்று தெரிவித்துள்ளார். அகர்கரின் இந்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 




ஏனென்றால், இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விராட் கோலியிடம் தங்களது அடுத்த திட்டம் எது என்று கேட்டபோது 2027ம் ஆண்டு உலகக்கோப்பையை மறைமுகமாக குறிப்பிட்டு தான் அதில் ஆட விரும்புவதையே அவர் தெரிவித்தார். ஆனால், அகார்கர் தற்போது விராட் கோலி 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார். 


பொய் சொல்கிறாரா அகர்கர்?


இதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் முன்பு இங்கிலாந்து தொடருக்கு தான் தயாராகி வருவதாகவும், அதிகபட்ச சதங்களை தான் விளாச விரும்புவதாகவும், 2018ம் ஆண்டு ஆடியது போல ஆட விரும்பி அவர் தயாராகி வந்ததாகவும் விராட் கோலி ஆடிய டெல்லி ரஞ்சி அணியின் பயிற்சியாளர் சரண்தீப்சிங் அதிர்ச்சியாக தெரிவித்திருந்தார். 


மேலும், டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கோப்பையையும் தனது தலைமையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் 2027 உலகக்கோப்பைக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.  




தற்போது அதேபோல அஜித் அகர்கர் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும்போது விராட் கோலி, ரோகித் சர்மா விவகாரத்தால் அகர்கர் பொய் சொல்கிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விராட் கோலியிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டபோதும் இதேபோல சம்பவம் அரங்கேறியது. 


ஜடேஜாவுக்கும் கல்தா:


கம்பீர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதலே அணியில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சீனியர் வீரர்களை குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலியை ஓரங்கட்டுவதையே அவர் தனது வேலையாக வைத்துள்ளதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆஸ்திரேலிய தொடரில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் கழட்டிவிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.