தற்போதைய உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், பல்வேறு விமர்சனங்களை தவிடுபொடியாக்கி மீண்டும் "கிங்" கோலியாக உருவெடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி.


தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.  குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை தவிர எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தது.


அனைத்து ஆட்டங்களிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இந்தியா விளையாடிய ஒரு சில ஆட்டங்களைத் தவிர எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் விராட் கோலி தனது பழைய ஃபார்மை நினைவூட்டினார்.


நடப்பு உலகக் கோப்பை தொரில் 3 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.  இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரராக கோலியைத் தேர்வு செய்து ஐசிசி கெளரவித்துள்ளது.


ஆனால், உலகக் கோப்பைத் தொடருக்கு முன் விராட் கோலியின் செயல்பாடு வேறு மாதிரியாக இருந்தது. அவர் விளையாடிய போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.


பல்வேறு விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். சோதனையான காலகட்டத்தில் இருந்த கோலி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். கேப்டன் பொறுப்பையும் கவனித்துக் கொண்டு ஆட்டத்திலும் கோலியால் கவனம் செலுத்த முடியவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்தது.


அவரது மோசமான ஆட்டத்தின்போது அவருக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் தோனி மெசேஜ் அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது. இதனை விராட் கோலியே தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி, அந்த அணி ஏற்பாடு செய்திருந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.


அதில் அவர் பேசியபோது சோதனையான காலகட்டத்தில் தோனி அவருக்கு மெசேஜ் அனுப்பிய தகவலை பகிர்ந்தார். அவர் பேசியதாவது:
என்னை உண்மையாக அணுகி ஆறுதலாக பேசியவர் தோனிதான். என்னைவிட அணியில் சீனியர் தோனி. நான் அவருடன் நல்ல உறவை பேணியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பரஸ்பர மரியாதையுடன் அவருடன் நட்பு பாராட்டி வருகிறேன். அவரைப் போன்ற ஒருவர் என் வாழ்க்கையில் கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் அதே நேரம், ​​நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க அவர்கள் மறந்து விடுகிறார்கள்? என்று என்னிடம் தோனி தெரிவித்தார். நான் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்தவராகவும், மன ரீதியில் வலிமை மிக்கவராகவும் பார்க்கப்படுகிறேன். எத்தகைய சவாலான சூழ்நிலையையும் நான் சமாளிப்பேன் என்னை பார்க்கிறார்கள். சில சமயங்களில் நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்து,  நாம் எப்படி இருக்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று விராட் கோலி அந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசினார்.




ICC Men's Player of the Month award: அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்...!


முன்னதாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசினார். அந்த ஆட்டத்திலும் ஆப்கனை இந்தியா வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் பதிவு செய்த சதம் கோலிக்கு 71ஆவது சர்வதேச சதம் ஆகும். 


இந்த சதத்தைப் பதிவு செய்ய விராட் கோலி, 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.