தற்போதைய சூழ்நிலையில் நமது அணியை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை என்று பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் எச்சரித்தார்.


எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்திக்கிறது. முதலாவது அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி  அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறுகிறது.


சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற உலகக் கோப்பையை நடத்தும் அணியும் நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா வெளியேறியது. இலங்கை,  அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய பிற அணிகளும் வெளியேறின. அந்தச் சுற்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வெளியேறின.


இந்நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள பிற அணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான ஹைடன் கூறியதாவது:


பாகிஸ்தான் அணி எதிரணியை அச்சுறுத்தும் அணியாக தற்போது திகழ்கிறது. நமது அணியை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்று அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால், வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது.
மேலும், எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளது. 


பிற நாட்டு அணிகள் நமது அணியை உலகக் கோப்பை ரேசில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று நினைத்தன. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அந்த அணிகள் நம்மை வெளியேற்ற முடியாது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தற்போது புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.


T20 World Cup 2022: எந்த அணி ஃபைனலுக்குத் தகுதி பெறும்..? தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ஜாலி ட்வீட்


நெதர்லாந்து அணியை வீழ்த்தவில்லை என்றால் நம்மால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நாம் தற்போது இருக்கும் இடத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், யாரும் நாம் இப்போது இருக்கும் இடத்தை விரும்பவில்லை. இதுதான் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





2021 உலகக் கோப்பை தொடரில் குரூப் பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த முறை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்றார் ஹைடன்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


ஹைடன் பேசிய வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்தப் பதிவில், "வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நாம் முன்னேறியதைத் தொடர்ந்து நமது அணியின் ஆலோசகரிடம் இருந்து ஊக்குவிக்கும் வார்த்தைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.