மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதின் மூலம், இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் பல்வேறு புதிய சாதனகளை படைத்துள்ளார்.


சதம் விளாசிய கோலி:


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்களை குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஷ்வால், ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் அரைசதம் விளாச, அதிகபட்சமாக கோலி சதம் விளாசி 121 ரன்களை குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் விளாசும் 29வது சதமாகும். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.


முதல் வீரர்:


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கோலி விளையாடும் சர்வதேச அளவிலான 500வது போட்டியாகும். இந்நிலையில், சதம் விளாசியதன் மூலம் 500வது சர்வதேச போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே சர்வதேச அளவில் 9 வீரர்களும், அதில் இந்தியா சார்பில் டிராவிட், சச்சின் மற்றும் தோனி என 3 பேரும் 500வது போட்டியில் விளையாடியுள்ளனர். அவர்களில் யாருமே சதம் விளாசியதே இல்லை. 


4வது வீரர்:


டெஸ்ட் போட்டியில் 3வது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் கோலி நான்காவது இடத்தை எட்டியுள்ளார். அவர் அடித்துள்ள 29 சதங்களில் 25 சதங்கள் 3வது விக்கெட்டிற்கு களமிறங்கி அடித்ததாகும். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ் மற்றும் ஜெயவர்தனே ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 4வது இடத்தில் இருந்த  பிரையன் லாராவை தற்போது கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சாதனை பட்டியல்;


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனை பட்டியலில், ஜாக் காலிஷ் உடன் சேர்ந்து இரண்டாவது இடத்தை கோலி (12) பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 13 சதங்களுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். 11 சதங்களை விளாசி இருந்த டிவில்லியஸின் சாதனையையும் தகர்த்துள்ளார்.


டான் பிராட்மேன் சாதனைய சமன் செய்த கோலி:


டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் கோலி 16வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார்.


5 ஆண்டுகளுக்குப் பிறகான சதம்:


5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 123 ரன்களை குவித்து இருந்தார். அதன்பிறகு தற்போது தான், மேற்கிந்திய தீவுகளில் அவர் சதம் விளாசியுள்ளார்.


அதிவேகமான 76 சதங்கள்:


சர்வதேச போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 76 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அதன்படி வெறும் 555 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.


அதிக ரன்கள்:


இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி, 5வது இடத்தை தனதாக்கியுள்ளார் கோலி (8,642 ரன்கள்). இதுபோன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கோலிக்கு, இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.