உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உலா வருபவர் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று வடிவ போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக, கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை கிரிக்கெட்டின் அரசனான விராட் கோலி முறியடித்து வருகிறார்.
1000 பவுண்டரிகள்:
அந்த வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரின்போது உலகிலேயே அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாறை படைத்து சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி, மற்றொரு புதிய சாதனையிலும் சச்சின் டெண்டுல்கருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதாவது, நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பெரியளவு ரன்களை குவிக்காவிட்டாலும் ஓரளவு நிதானமான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தினார். இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலி 4 பவுண்டரிகள் அடித்தார். அதில் அவர் அடித்த 3வது பவுண்டரி டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்த 1000வது பவுண்டரி ஆகும்.
5வது இந்தியர்:
சர்வேசத டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், லட்சுமணனுக்கு பிறகு 1000 பவுண்டரிகள் அடித்த இந்தியர் விராட் கோலி ஆவார். மேலும், தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் இந்திய வீரர்களில் 1000 பவுண்டரிகள் விளாசிய ஒரே வீரரும் விராட் கோலி மட்டுமே ஆகும். சர்வதேச அளவில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வீரர்களில் 1000 பவுண்டரிகள் விளாசிய வீரர்கள் ஜோ ரூட், வார்னர் ஆகியோருக்கு பிறகு விராட் கோலி மட்டுமே ஆவார்கள்.
விராட் கோலி இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1001 பவுண்டரிகள் விளாசியுள்ளார். சர்வதேச அளவில் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 58 பவுண்டரிகள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் 1654 பவுண்டரிகள் விளாசியுள்ளார். சேவாக் 1233 பவுண்டரிகளும், விவிஎஸ் லட்சுமணன் 1121 பவுண்டரிகளும் விளாசியுள்ளனர்.
எகிறும் எதிர்பார்ப்பு:
35 வயதான விராட் கோலி இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 34 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 947 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட்டின் மேதை என்ற அந்தஸ்தை ஏற்கனவே அடைந்துவிட்ட விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு மகுடத்தை தனது தலையில் சூடிக் கொண்டுள்ளார்.
இந்திய அணி அடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. டெஸ்ட் தொடரில் சதம் அடித்து நீண்ட நாட்களான விராட் கோலி, இந்த தொடர்களின் தனது சத கணக்கை மீண்டும் தொடங்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.