இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய 600வது இன்னிங்ஸில் களம் இறங்க உள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது. அதாவது, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
600வது இன்னிங்ஸ்:
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்குப் பிறகு அனைத்து வடிவங்களிலும் 600 இன்னிங்ஸ்களைப் பதிவு செய்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கோலி பெறவுள்ளார். 2008ல் சர்வதேச அரங்கில் அறிமுகமானதில் இருந்து இதுவரை, கோலி 599 இன்னிங்ஸ்களில் (டெஸ்டில் 199, ஒருநாள் போட்டிகளில் 283 மற்றும் டி20 போட்டிகளில் 117) விளையாடியுள்ளார்.
782 இன்னிங்ஸ்களுடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச வாழ்க்கையில் அதிக இன்னிங்ஸ்கள் பட்டியலில் முதலிடத்திலும், இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனே (725), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (668) ஆகியோர் முதல் மூன்று இடங்களிலும் உள்ளனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி 199 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இதில், 29 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் உட்பட 48.31 சராசரியுடன் 9035 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி சொதப்பி வருகிறார். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் தன்னுடைய 600வது இன்னிங்ஸ் என்பதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.