2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது.


ஒலிம்பிக்கில் கிரிக்கெட்:


இந்தக் கூட்டத்தில், 2028 ஒலிம்பிக்கில் மற்ற 4 விளையாட்டுகளுடன் கிரிக்கெட்டையும் சேர்க்க அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டது. 99 ஐஓசி உறுப்பினர்களில் இருவர் மட்டுமே இந்த ஐந்து விளையாட்டுகளையும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 2028 இல் சேர்ப்பதை எதிர்த்தனர்.


கிரிக்கெட்டுடன், பேஸ்பால்-சாஃப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, ஸ்குவாஷ் மற்றும் லாக்ரோஸ் ஆகியவையும் ஒலிம்பிக் 2028 இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோரிக்கை விடப்பட்டிருந்த குத்துச்சண்டைக்கு மட்டும் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையே, இந்த ஐந்து விளையாட்டுகளும் ஒலிம்பிக்கில் நுழைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.


கோலிதான் காரணம்:


முன்னதாக, கடந்த வாரம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு, 2028 ஒலிம்பிக்கில் இந்த ஐந்து விளையாட்டுகளையும் சேர்க்க லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு அமைப்பாளர்களின் முன்மொழிவு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் அளித்தது.


நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மும்பையில் இது தொடர்பான கடைசி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இந்த விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்ப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.






இந்தநிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு விராட் கோலியும் முக்கிய காரணம் என இத்தாலியின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் துப்பாக்கி சுடும் வீரர், லாஸ் ஏஞ்சல்ஸ்2028 இன் விளையாட்டு இயக்குனரான நிக்கோலோ காம்ப்ரியானி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “உலகளவில் 2.5 பில்லியன் ரசிகர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஏன்? என்று உங்களில் சிலர் ஆச்சரியப்படுவீர்கள். அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு உண்மையானது. ஏற்கனவே இந்த ஆண்டு மேஜர் லீக் கிரிக்கெட் தொடங்கப்பட்டது, இது எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது. 


340 மில்லியன் ஃபாலோயர்ஸ்:


அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து டி20 உலகக் கோப்பையை நடத்துகிறது.  ஒலிம்பிக்கில் இளைஞர்களுக்கு பொருத்தமான விளையாட்டுகளை வழங்க இருக்கிறோம். அதன்படி, கிரிக்கெட் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் 340 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உலகில் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரர்களில் விராட் கோஹ்லி மூன்றாவது இடத்தில் உள்ளார். இது லு ப்ரோன் ஜேம்ஸ், டாம் பிராடி மற்றும் டைகர் உட்ஸ் ஆகியோரை விட அதிகம். இதுவும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பதற்கு முக்கிய காரணம் ” என தெரிவித்தார். 


128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்: 


128 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1900 ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில்  கிரிக்கெட் விளையாடப்பட்டது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க நீண்ட நாட்களாக முயற்சிகள் நடந்து வந்த நிலையில், இன்று மீண்டும் 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.  2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் கிரிக்கெட் விளையாடப்படும்.