இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆட உள்ளது.
கால் பதித்த விராட்:
இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி, ரோகித் சர்மா பங்கேற்க உள்ளனர்.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டனில் இருந்து இந்தியா வந்தார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி லண்டனில் குடியேறினார். ஆஸ்திரேலியா தொடருக்காக விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.
விரைவில் ஆஸ்திரேலியா பயணம்:
இந்திய அணியுடன் இணையும் அவர் பயிற்சி மேற்கொள்கிறார். பின்னர், விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு அணியுடனர் செல்கிறார். விராட் கோலி இந்தியா திரும்பியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலி வருகையை முன்னிட்டு ஆஸ்திரேலியா தொடருக்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இரு அணிகளும் மோதும் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி நேரடியாக பங்கேற்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். விராட் கோலி இந்திய அணிக்காக கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக மார்ச் 9ம் தேதி நடப்பாண்டில் விளையாடினார். சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
பேட்டால் பதில் சொல்வாரா?
விராட் கோலி இந்திய அணிக்காக 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் ஆட ஆர்வம் காட்டி வரும் சூழலில், அவருக்கும், ரோகித்சர்மாவிற்கும் எதிராக பிசிசிஐ-யில் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்திய அணிக்காக பல நெருக்கடியான தருணங்களில் சதங்களை விளாசி அணியை காப்பாற்றிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பிசிசிஐக்கும், கம்பீர் - அஜித் அகர்கர் கூட்டணிக்கு பதிலடி தரும் வகையில் இந்த தொடரில் தங்கள் பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று கருதப்படுகிறது.
சாதனைகள்:
விராட் கோலி இதுவரை 302 ஒருநாள் போட்டிகளில் 290 இன்னிங்சில் பேட் செய்து 14 ஆயிரத்து 181 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 183 ரன்களை விளாசியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை 51 சதத்துடன் தன்வசம் வைத்துள்ளார்.
123 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 ஆயிரத்து 230 ரன்களும், 125 டி20 போட்டியில் ஆடி 4 ஆயிரத்து 188 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 267 போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 661 ரன்களும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 31 அரைசதங்களும், 30 சதங்களும், 7 இரட்டை சதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 74 அரைசதங்கள், 51 சதங்கள் விளாசியுள்ளார். டி20யில் 38 அரைசதங்களும் 1 சதமும் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் 63 அரைசதங்களும் 8 சதங்களும் விளாசியுள்ளார்.