IND Vs WTC Points Table: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், வென்ற இந்தியா தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Continues below advertisement

இந்திய அணி அபார வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் கில் தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், 121 ரன்கள் என்ற இலக்கை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 58 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. 

Continues below advertisement

போட்டியின் சுருக்கம்:

போட்டியில் டாஸ் வென்ற்அ இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 518 ரன்களை குவித்தது. ஜெய்ஷ்வால் மற்றும் கில் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 248 ரன்களுக்கே ஆட்டமிழந்து, ஃபாலோ ஆன் பெற்றது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, ஜான் கேம்பெல் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் சதம் விளாசினர், மற்ற வீரர்கள் வழக்கம் போல் சொதப்ப, மேற்கிந்திய தீவுகள் அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 121 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது.

WTC புள்ளிப்பட்டியல் நிலவரம்

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் வரை நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில், 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி மற்றும் ஒரு போட்டியில் சமனை பதிவு செய்திருந்தது. இதன் மூலம், 55.56 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால், வெற்றி சதவிகிதமானது 61.90 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. காரணம் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள், 100 மற்றும் 66.67 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் ஆக்கிரமித்துள்ளன.

இதையடுத்து அந்த இரு அணிகளின் டெஸ்ட் தொடர்களின் முடிவுகள் மற்றும் அடுத்த மாதம் தென்னாப்ரிக்காவில் நடைபெற உள்ள இந்திய அணியின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுகள் அடிப்படையிலுமே, முதல் இரண்டு இடங்களுக்கும் கில் தலைமையிலான அணி முன்னேறுவது அமைய உள்ளது.

WTC புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமன் புள்ளிகள் வெற்றி சதவிகிதம் %
ஆஸ்திரேலியா 3 3 0 0 36 100
இலங்கை 2 1 0 1 16 66.670
இந்தியா 7 4 2 1 40 61.90
இங்கிலாந்து 5 2 2 1 26 43.330
வங்கதேசம் 2 0 1 1 4 16.670
மே.தீவுகள் 4 0 4 0 0 0.000

தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணம்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இரண்டு முறை இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதேநேரம், கடந்த முறை இறுதிப்போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. இந்த சூழலில் 2027ம் ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காவது முன்னேற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த தொடரை கில் தலைமையிலான அணி 2-0 என கைப்பற்றினால், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.