ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் போட்டி வருகிற செவ்வாய்க்கிழமை மொஹாலியில் தொடங்குகிறது.


இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மிக நீண்ட நாட்கள் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பி பார்முக்கு வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒன்றாக இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. சமீப காலமாக இணையத்தில் "ஷாகபூம்" என்ற பாடல் ரீல்ஸ் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அந்த பாடலுக்கே தற்போது இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். 


ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவைப் பகிர்ந்து, "விராட் கோலியும் நானும் எப்படி செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் என்று பதிவிட்டுள்ளார். 






நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக பந்துவீச்சே பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது கடைசி கட்டத்தில் இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பி ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயங்களில் இருந்து மீண்டுள்ளனர். இது இந்திய அணிக்கு கூடுதல் போனஸ். மேலும் ஆஸ்திரேலியா தொடருக்கு எடுக்கப்பட்ட முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு மாற்று வீரராக உமேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டார். 






இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டம்பர் 20 ஆம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 25 ஆம் தேதிகளிலும் விளையாடுகிறது.


ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.