ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் போட்டி வருகிற செவ்வாய்க்கிழமை மொஹாலியில் தொடங்குகிறது.


நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக பந்துவீச்சே பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது கடைசி கட்டத்தில் இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பி ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயங்களில் இருந்து மீண்டுள்ளனர். இது இந்திய அணிக்கு கூடுதல் போனஸ். மேலும் ஆஸ்திரேலியா தொடருக்கு எடுக்கப்பட்ட முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு மாற்று வீரராக உமேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டார். 


இந்த நிலையில், இன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ரோகித்திடம் விராட் கோலி தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்குவாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, “எங்களைப் பொறுத்தவரை, எங்கள் எல்லா வீரர்களின் தரத்தையும் அவர்கள் எங்களுக்காக என்ன கொண்டு வருகிறார்கள் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். விராட் கோலி தொடக்கம் தர வேண்டும் என்பது எங்களது விருப்பமாக உள்ளது. நாங்கள் அதை எப்போதும் மனதில் வைத்திருப்போம். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி அசத்தினார். இந்திய அணியில் நாங்கள் மூன்றாவது தொடக்க வீரரை எடுக்காததால், விராட் கோலி எங்களுடன் தொடக்க வீரராக களமிறங்கலாம்.






விராட் கோலி எங்கள் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர், சில போட்டிகளில் அவர் ஓபன் செய்வார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில், அவர் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் உலகக் கோப்பையில் கே.எல். ராகுல் தொடக்க வீரராக பேட்டிங் செய்ய வேண்டும். விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால் கே.எல்.ராகுல் செயல்திறன் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகும். கே.எல். ராகுல் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரர். எங்களைப் பொறுத்தவரை, நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், எங்கள் சிந்தனை செயல்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை, கே.எல்.ராகுல் எங்களுக்காக தொடக்க வீரராக சிறப்பான தொடக்கம் தருவார் என தெளிவாக உள்ளோம், அவர் ஒரு தரமான வீரர் மற்றும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது " என்று தெரிவித்தார். 


இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டம்பர் 20 ஆம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 25 ஆம் தேதிகளிலும் விளையாடுகிறது.


ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.