சேப்பாக்கத்தில் நேற்று இரவு நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை போட்டியின் போது விராட் கோலி அவுட்டாகிய பிறகு, ​​அவரால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த அவர் தலையில் அடித்துக் கொள்வது போன்ற காட்சிகள் வெளியாகியது. தற்போது விராட் கோலி கோபத்தின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சதத்தை தவறவிட்ட கோலி:


இந்த போட்டியில், 200 ரன்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது உள்ளே வந்த விராட் கோலி 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​85 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்தில் லாபுசாக்னேவிடம் கேட்ச் ஆனார்.


இந்த தவறை அவர் செய்யாமல் இருந்திருந்தால், அவர் தனது 48வது ஒருநாள் சதத்தை எளிதாக முடித்திருக்க முடியும். மேலும், ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 48 ஒருநாள் சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருப்பார். இந்த தவறால் விராட் விரக்தியடைந்து டிரஸ்ஸிங் அறையை அடைந்தவுடன், அவர் ஷாட்டின் ரீப்ளேயைப் பார்த்துவிட்டு தன் தலையில் 4 - 5 முறை அடித்துகொண்டார். 






வெற்றிக்கு அழைத்து சென்ற கோலி- கே.எல்.ராகுல் கூட்டணி:


உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா 52 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆட்டத்தை முடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரமான வெற்றியை பதிவு செய்தது. 


முதலில் ஆஸ்திரேலியாவை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் வெறும் 199 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நிலையில், விராட் கோலி (85), கே.எல்.ராகுல் (97) ஆகியோரின் இன்னிங்ஸால் எளிதான வெற்றியைப் பெற்றனர். இருப்பினும், இந்தியா தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில் இரண்டு ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தொட்டுவிடுமோ என அச்சத்தை தந்தது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையேயான 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 


சாதனைகள்: 


கோலி மற்றும் கே.எல்.ராகுல் இடையேயான இந்த பார்ட்னர்ஷிப் உலகக் கோப்பையில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டிகளில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. முன்னதாக, கடந்த 1999 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓவல் மைதானத்தில் அஜய் ஜடேயா மற்றும் ராபின் சிங் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த 24 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை நேற்று கோலி மற்றும் கே.எல்.ராகுல் உடைத்தனர். 


1996 உலகக் கோப்பையின்போது வினோத் காம்ப்ளி மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோரின் முந்தைய சாதனை பார்ட்னர்ஷிப்பை முறியடித்து, ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் நான்காவது விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பையும் பதிவு செய்தது.