இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த சூப்பர் 12 சுற்று அடிப்படையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது. 


டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாத காரணத்தினால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியால் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் முதல் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை கருத்து தெரிவித்து வந்தனர். 




இந்தசூழலில் தான் விராட் கோலி  டி 20 உலககோப்பைக்கு பிறகு டி 20 தொடரின் கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில்,  டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும், கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று தெரிவித்தார். 


இதையடுத்து, டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி வருகின்ற 17 ம் தேதி ஜெய்ப்பூரிலும், 2 வது போட்டி 19 ம் தேதி ராஞ்சியிலும், 3 வது மற்றும் கடைசி போட்டி 21 ம் தேதி கொல்கத்தாவிலும்  நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 




இந்தநிலையில், இந்திய டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் அனைவருடனும் ஒரு குழுவாக நான் மேற்கொண்ட அனைத்து நினைவுகளும் அற்புதமானது. உங்களுடன் பயணித்த பயணத்திற்கு நன்றி. உங்கள் பங்களிப்பு மகத்தானது மற்றும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நினைவுகூரப்படும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 


விராட் கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை  45 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி  29 ல் இந்தியா வெற்றியும், 14 ல் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டி முடிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.