இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி  நியூசிலாந்து  அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலிக்கு இந்த தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 


இந்தச் சூழலில் அந்த அணியில் புதிதாக ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் களமிறங்கியுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதேபோல் யுஏஇ சென்றவுடன் கொல்கத்தா அணியின் வெற்றியில் வெங்கடேஷ் ஐயர் முக்கிய பங்கு வகித்தார். 






 


அதன்பின்னர் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் இந்த இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்கியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல் மத்திய பிரதேச அணிக்காக களமிறங்கியுள்ள வெங்கடேஷ் ஐயர் 5 போட்டிகளில் 155 ரன்களும், 5 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். அதேபோன்று ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் தற்போது வரை 5 போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் அவரின் வருகையும் இந்திய அணிக்கு நல்ல ஒரு தொடக்கமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. 




அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் மீண்டும் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஆகவே அந்தத் தொடருக்கு இந்திய அணியை கட்டமைக்கும் பொறுப்பு ராகுல் டிராவிட்டிற்கு உள்ளது. இதற்காக தன்னுடைய முதல் தொடரிலேயே அவர் இளம் வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது. எப்போதும் இளம் வீரர்களை சிறப்பாக பட்டை தீட்டி கொண்டுவருவதில் டிராவிட் வல்லவர். எனவே அவருக்கு முதல் தொடரில் இத்தனை இளம் வீரர்கள் கிடைத்துள்ளது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. 


பிசிசிஐ ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்து ஒரு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை தயாரிக்க திட்டம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் இன்னும் சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை. அத்துடன் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரோலிலும் ஹர்திக் பாண்டியா தவிர வேறு நல்ல மாற்று வீரர் இல்லை. எனவே மிடில் ஆர்டரை கட்டமைக்கும் முக்கியமான பொறுப்பு ராகுல் டிராவிட்டிற்கு உள்ளது. அதற்கு அவர் இளம் வீரர்களை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: ரோஹித் புதிய கேப்டன்... நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கோலிக்கு அணியில் இடமில்லை!