சையத் முஷ்தாக் அலி தொடரின் க்ரூப் சுற்றுகள் நேற்றோடு முடிந்திருக்கின்றது. இதில் மும்பை அணி காலிறுதிக்கோ அல்லது காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கோ தகுதிப்பெற முடியாமல் வெளியேறியிருக்கிறது. மும்பை அணி மோசமாக பெர்ஃபார்ம் செய்திருந்தாலும் அந்த அணியின் கேப்டனான அஜிங்கியா ரஹானே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். இந்த சீசனில் ஆடிய 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்.


இந்திய வீரர்களிலேயே அஜிங்கியா ரஹானே எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான வீரராக இருக்கக்கூடியவர். மரபார்ந்த முறையில் கிரிக்கெட் புக் ஷாட்களை அப்படியே ஆடக்கூடிய க்ளாஸான பேட்ஸ்மேன். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு மண்ணில் சமகால வீரர்களில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய வீரர் ரஹானேவே. ஆனால், அவருடைய கிரிக்கெட் க்ராஃப் சமீபமாக இறங்குமுகமாகவே இருந்து வருகிறது.


2016 இல் தான் கடைசியாக இந்திய அணிக்காக டி20 போட்டியில் ஆடியிருந்தார். ஓடிஐ போட்டிகளில் கடைசியாக 2018 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஆடியிருந்தார். அதன்பிறகு, ஒயிட்பால் கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். டெஸ்ட் வீரராக மட்டுமே குறுக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரையே வென்று கொடுத்தவராக கூட இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடைய பேட்டிங் பெர்ஃபார்மென்ஸ் என்பது மோசமாகவே இருந்தது. சீரற்ற தன்மையால் பெரும் அவதிக்குள்ளானார். ஒரு ஆண்டில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் சதமடித்து நல்ல இன்னிங்ஸ் ஆடுவார். அதன்பிறகு, அந்த வருடத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு இன்னிங்ஸை கூட ஆடமாட்டார். கடைசியாக ஆடிய இங்கிலாந்து தொடரிலும் சொதப்பலே. அடுத்த தொடருக்கு அவர் அணியில் இருப்பாரா என்பதே சந்தேகம் என்கிற சூழலே இருந்தது.


சர்வதேச கிரிக்கெட் இப்படி என்றால் ஐ.பி.எல் அதைவிட மோசமாக அமைந்தது. எப்போதும் ஐ.பி.எல் இல் சீசனுக்கு 400 ரன்கள் என சீராக அடிக்கக்கூடியவர். கடந்த இரண்டு சீசனாக கடுமையாக சொதப்பியிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பதவியை பறித்து அணியை விட்டும் வெளியேற்றியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரஹானேவுக்கு இடம் கிடைத்தது. ஆனால், அதை ரஹானே சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 2020 சீசனில் 9 போட்டிகளில் ஆடி 103 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். கடைசி சீசனில் அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் பென்ச்சிலேயே வைத்துவிட்டார்கள். ஆடிய இரண்டு போட்டிகளிலும் சொதப்பல்.


இப்படியாக சர்வதேச கிரிக்கெட், ஐ.பி.எல் என திரும்பிய பக்கமெல்லாம் ரஹானேவுக்கு போதாத காலமாகவே இருந்தது. கிரிக்கெட்டில் அவருடைய எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருந்தது. இந்நிலையில்தான் சையத் முஷ்தாக் அலி தொடர் தொடங்கியது. மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கிய ரஹானே 5 போட்டிகளில் 4 அரைசதங்கள் அடித்திருக்கிறார். மற்ற வீரர்கள் சொதப்பிய போதும் ஒரு கேப்டனாக ஒரு ஓப்பனராக தன்னுடைய எதிர்காலத்திற்காகவும் பொறுப்பை உணர்ந்து அட்டகாசமாக ஆடியிருந்தார். 5 போட்டிகளில் 286 ரன்களை குவித்திருந்தார். இந்த பெர்ஃபார்மென்ஸ் அவருக்கு இந்திய அணியில் இடத்தை பெற்றுக் கொடுக்குமா என்பது இனிமேதான் தெரியும். ஆனால், ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ரஹானேவை வாங்க பெரும்பாலான அணிகள் மல்லுக்கட்டும். ஒரு சீசன் முழுவதும் பென்ச்சில் வைக்கப்பட்ட வீரர் அடுத்த சீசனில் தனக்கான டிமாண்டை உருவாக்குவதே பெரிய வெற்றிதான்.