இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே டிரினிடாட்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் விராட் கோலி தனது 500வது சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். இதில், இந்திய அணிக்காக முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த கோலி, 11 பவுண்டரிகள் உதவியுடன் 121 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த சதத்தின் மூலம் 2018ம் ஆண்டு பிறகு வெளிநாட்டு மண்ணில் தனது சதத்தையும் பதிவு செய்தார். அதேநேரத்தில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குள் கோலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 8 சதங்களை அடித்துள்ளார். 


கோலியின் சத வேட்டை: 


 1019 நாட்கள் என்ற நீண்ட காத்திருப்புக்கு பிறகு விராட் கோலி கடந்த ஆசியக் கோப்பை 2022 தொடரில் சதம் அடித்தார். அதன்பிறகு, அவரது பேட்களில் இருந்து பல சதங்களை அடித்துள்ளார். அதாவது, 2022 ஆசிய கோப்பைக்கு பிறகு கோலி 8 சதங்களை அடித்துள்ளார். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டியில் கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். 


இதற்குப் பிறகு, 2022 டிசம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி 113 ரன்கள் எடுத்தார். பின்னர் ஜனவரி 2023 ம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக விளையாடிய 3 ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 113 ரன்களும், தொடரின் கடைசிப் போட்டியில் 166* ரன்கள் என்ற சிறப்பான இன்னிங்ஸை பதிவு செய்தார். 


ஒருநாள் போட்டிக்கு பிறகு, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி மூலம் டெஸ்ட் சதங்களின் வறட்சியை கோலி முடிவுக்குக் கொண்டுவந்தார். அகமதாபாத்தில் விளையாடிய கடைசி டெஸ்டில் 186 ரன்கள் எடுத்தார். 2019ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இந்த சதம் கோலியின் பேட் மூலம் வந்தது.


ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டம்: 


சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிறகு, ஐபிஎல் 16வது சீசனிலும் கோலி சிறப்பான பார்மில் விளையாடினார். அவர் இந்த சீசனில் இரண்டு சதங்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்களில் பட்டியலில் நான்காவது இடம் பிடித்தார். ஐபிஎல் 16வது சீசனில் 14 போட்டிகளில் 53.25 சராசரி மற்றும் 139.82 ஸ்ட்ரைக் ரேட்டில் 639 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இறுதியாக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், 315 நாட்களில் தனது 8வது சதத்தை பூர்த்தி செய்தார். இது தவிர, செப்டம்பர் 2022 முதல், கோலியின் பேட்டில் இருந்து அதிகபட்சமாக 6 சர்வதேச சதங்களை அடிக்கப்பட்டுள்ளது. கோலியுடன் இணைந்து கில் 6 சதங்கள் அடித்துள்ளார். பாபர் அசாம் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 5 சதங்களுடன் கோலி மற்றும் கில் ஆகியோருக்கு கீழே உள்ளனர்.