ஆசிய கோப்பையில் இன்று துபாய் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் விராட்கோலி மீதுதான் ஏற்பட்டது.
ஒரு மாத இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய விராட்கோலி முதல் போட்டியிலே பாகிஸ்தான் அணிக்கு எதிராக பொறுப்புடன் 35 ரன்கள் விளாசினார். அடுத்த போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக அசத்தலான அரைசதம் விளாசி தனது கம்பேக்கை வெளிப்படுத்தினார்.
இன்றைய போட்டியில் விராட்கோலிக்கு பல்வேறு சாதனைகளை படைக்கும் பொன்னான வாய்ப்பு கிட்டியுள்ளது. அதாவது, இன்றைய போட்டியில் விராட்கோலி 3 சிக்ஸர்களை விளாசினால், சர்வதேச டி20 போட்டியில் 100 சிக்ஸர்களை விளாசிய 2வது இந்தியர் என்ற அசத்தலான சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
அதேசமயத்தில், இன்றைய போட்டியில் விராட்கோலி 4 பவுண்டரிகள் விளாசினால், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் விளாசிய மார்டின் கப்தில் சாதனையை முறியடிப்பார். கப்தில் இதுவரை டி20 போட்டிகளில் 306 பவுண்டரிகளை விளாசியுள்ளார். விராட்கோலி டி20 போட்டிகளில் 303 பவுண்டரிகளை விளாசியுள்ளார். ரோகித் சர்மா 315 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
விராட்கோலி இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். விராட்கோலி 82 டெஸ்ட் போட்டிகளில் 910 பவுண்டரிகளை விளாசியுள்ளார். 262 ஒருநாள் போட்டிகளில் 1159 பவுண்டரிகளை விளாசியுள்ளார். 101 டி20 போட்டிகளில் ஆடி 303 பவுண்டரிகளை விளாசியுள்ளார். 223 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 578 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
கவர்டிரைவின் கிங் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் விராட்கோலியின் எத்தனை வீரர்கள் சுற்றி நின்றாலும் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்புவதில் வல்லவராக உள்ளார். இதனால், இன்றைய போட்டியில் அவர் மார்டின் கப்தில் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்ற பெருமையை அயர்லாந்து அணியின் பால் ஸ்டெர்லிங் 344 பவுண்டரிகளுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.