கிரிக்கெட்டின் ராஜா, ரன்மெஷின் என்று ரசிகர்களாலும், இந்திய ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுபவர் விராட்கோலி. நவம்பர் 5-ந் தேதியான இன்று அவருக்கு 33வது பிறந்தநாள் ஆகும். இந்திய அணியின் பேட்ஸ்மேனாக அறிமுகமாகி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளில் மேட்ச் வின்னராக அசத்தி, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிற்கு உயர்ந்தவர்.


உலககோப்பை 50 ஓவர் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என்று இதுவரை எந்த கோப்பையையும் வென்றதில்லை. சுமார் 10 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக பொறுப்பு வகித்தும் ஒரு முறைகூட பட்டத்தை கைப்பற்றியதில்லை. நடப்பு டி20 உலககோப்பை தொடரிலும் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது. இத்தனை விமர்சனங்களை கோலி தனது கேப்டன்சியில் சந்தித்துள்ளார். அப்படியானால், விராட்கோலி சிறந்த கேப்டன் இல்லையா? என்று கேள்வி எழுப்பினால் நிச்சயம் அது தவறு என்றுதான் கூற வேண்டும்.




2014-2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின் பாதியிலே கேப்டன் தோனி, தனது ஓய்வை அறிவிக்க இந்திய அணியின் கேப்டனாக இக்கட்டான நேரத்தில் விராட்கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தோனி மூன்று வடிவிலான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ஒரு சாதாரண வீரராக மட்டும் ஆடுவதாக அறிவித்த பிறகு 2017ம் ஆண்டுமுதல் மூன்று வடிவ போட்டிகளுக்கும் விராட்கோலி கேப்டனாக பொறுப்பு வகிக்கத் தொடங்கினார்.


இந்திய அணிக்காக 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர் என்ற பெருமையை தோனி, அசாரூதினுக்கு பிறகு கோலி படைத்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்திற்கு எதிராக இழந்த இந்திய கேப்டன் என்று விமர்சிக்கப்படும் விராட்கோலிதான், இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளை வென்றுத்தந்த கேப்டன் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.


இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக ஆடியுள்ள கோலி, அதில் 38 போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார். 16 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த தோனியும், கங்குலியும் கூட கோலிக்கு பின்னால்தான் இந்த பட்டியலில் உள்ளனர். உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இந்தியாவை வெற்றி பெறச் செய்த கேப்டன் என்ற பெருமையையும் கோலி தன்வசமே வைத்துள்ளார். தோனி 21 போட்டிகளில் மட்டும் உள்நாட்டில் வென்றிருக்க, கோலி 22 போட்டிகளில் உள்நாட்டில் வென்றுள்ளார்.




இந்திய அணிக்காக கேப்டனாக அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையும் கோலியின் வசமே சாரும். கேப்டனாக மட்டும் கோலி இந்திய அணிக்காக 20 சதங்களை அடித்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை  கேப்டன் பொறுப்பில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர் பெருமையையும் விராட்கோலி படைத்துள்ளார். கேப்டனாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதங்களை அடித்த வீரர் என்ற அரிய சாதனையும் கோலியின் பெயரிலே பதிவாகியுள்ளது. அவர் இதுவரை அடித்த 7 இரட்டை சதங்களும் கேப்டன் பொறுப்பேற்ற பிறகே அடித்ததாகும்.


டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் விராட்கோலி தனக்கென்று மிகப்பெரிய ராஜாங்கத்தை நடத்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக விராட்கோலி சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள விராட்கோலி அவற்றில் 65 போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்துள்ளார். 27 போட்டிகள் தோல்வியில் முடிந்துள்ளது. தனது வெற்றி சதவீதமாக கோலி 70.43 என்று வைத்துள்ளார்.




இந்திய அணிக்காக தோனிக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் அதிக ரன்களை சேர்த்த வீரராகவும் கோலி வலம் வருகிறார். தோனி 6 ஆயிரத்து 641 ரன்களுடன் முதலிடத்தில் இருக்க, விராட்கோலி 5 ஆயிரத்து 320 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர் பெருமையை எட்டிப்பிடிக்க கோலிக்கு இன்னும் ஒரு சதமே தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாண்டிங் 230 போட்டிகளில் கேப்டனாக ஆடி 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனால், கோலி 95 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக ஆடி 21 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


விராட்கோலி டி20 போட்டிகளிலும் சிறந்த கேப்டனாகவே பணியாற்றியுள்ளார் என்பதை புள்ளி விவரங்கள் கூறுகிறது. இந்திய அணிக்காக தோனி 72 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 முறை வெற்றி பெற்றுள்ளது. விராட்கோலி தலைமையில் இந்திய அணி 48 போட்டிகளில் ஆடி 28 முறை வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டனாக 5வது இடத்தில் விராட்கோலி உள்ளார்.




கேப்டனாக சிறப்பாக பணியாற்றவில்லை என்று விமர்சிக்கப்படும் விராட்கோலி தலைமையின்கீழ்தான் இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. இங்கிலாந்து மண்ணில் 60 ஆண்டுகளாக வெற்றி பெறாத லார்ட்ஸ் மைதானத்திலும், சுமார் அரைநூற்றாண்டிற்கு பிறகு ஓவல் மைதானத்திலும் வெற்றி பெற்று மாபெரும் சாதனையைப் படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணிலும், நியூசிலாந்து மண்ணிலும் ஒருநாள், டி20 தொடர்களை எல்லாம் வென்றும் அசத்தியுள்ளது.


ஐ.பி.எல்.லில் ஒரு கோப்பையைக் கூட கைப்பற்றவில்லை என்பதுதான் விராட்கோலி மீதான பெரிய விமர்சனம். ஆனால், இதுவரை ஐ.பி.எல். போட்டிகளிலே அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையும் கோலி வசம் மட்டும்தான் உள்ளது. இதுவரை 207 போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 283 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 5 சதங்கள் அடங்கும்.


எந்தவொரு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் தொடரையும் வென்றதில்லை என்று குறைகூறப்படும் விராட்கோலியை கிரிக்கெட் உலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதே, அவர் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பையை வென்றதன் மூலமாகவே. 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக அப்போதே விராட்கோலி உலககோப்பையை வென்று கொடுத்தவர். வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் தவிர்க்க முடியாதவை. ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, ஒரு கேப்டனாகவும் இந்திய அணியை விராட்கோலி தரவரிசையிலும் சரி, தரத்திலும் சரி உயர்த்தியுள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மை.