டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியா-பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் முதல் ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் வந்த சௌமியா சர்கார்(5), முஸ்ஃபிகூர் ரஹிம்(1) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 


இதனால் பங்களாதேஷ் அணி 3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 11 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் நயிம் மற்றும் மஹமதுல்லா ஆகிய இருவரும் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் நயிம் 17 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் பங்களாதேஷ் அணி சீட்டுக் கட்டு போல் சரிந்தது. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் ஆடெம் ஸாம்பாவின் சுழலில் பங்களாதேஷ் அணி சிக்கி திணறியது. சிறப்பாக பந்துவீசிய அவர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இறுதியில் பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 73 ரன்கள் மட்டும் எடுத்தது. 




அதன்பின்னர் 74 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் சேர்த்தனர். டேவிட் வார்னர் 18 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதன்பின்பு 20 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளின் உதவியுடன் 40 ரன்கள் எடுத்து ஃபின்ச் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 16 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 


 






அதேபோல் தென்னாப்பிரிக்க அணியும் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதேபோல் தென்னாப்பிரிக்க அணி தன்னுடைய கடைசி போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. எனவே அந்த கடைசி போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும் வாய்ப்பை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆஸி வெற்றி பெற்ற நிலையில் புள்ளிகள் பட்டியல்: ( ஐசிசி இணையப்பக்கத்தின்படி)..




மேலும் படிக்க:இவரு கிரிக்கெட்டின் ரங்கன் வாத்தியார்.. டிராவிட் செய்த சம்பவங்கள்.. தொடங்கியது அடுத்த பயணம்!