கிரிக்கெட்டில் 'மன்கட்' என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. முதலில் மன்கட் என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். பௌலர்கள் பந்து வீசும் முன்பாகவே நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் நிற்கும் வீரர் ரன் எடுப்பதற்காக க்ரீஸை விட்டு வெளியே வரும்பட்சத்தில், பௌலர் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு அந்த பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்கிக்கொள்ளலாம். இந்த முறையிலான அவுட்டுகளே 'மன்கட்டிங்' என்று அழைக்கப்படுகிறது.


1800 களில் இங்கிலாந்தின் கவுண்ட்டி போட்டிகளிலிலிருந்தே இந்த முறையில் அவுட் செய்வதை பௌலர்கள் கடைபிடித்து வருகின்றன. சமீபத்தில், ஐ.பி.எல்.லில் ஜாஸ் பட்லரை இந்திய வீரர் அஷ்வின் மன்கட் செய்திருப்பார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. அஷ்வினின் 'மன்கட்' Spirit Of the Game'யே குலைப்பதாக இருக்கிறதென பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அஷ்வின் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். 'நான் செய்தது சரியான விஷயமே. காலம் காலமாக பேட்ஸ்மேன்கள் க்ரீஸை விட்டு வெளியே வந்து அட்வாண்டேஜை எடுத்து வருகின்றனர். நான் என்னுடைய செயலுக்காக வருத்தமெல்லாம் தெரிவிக்கப்போவதில்லை' என உறுதியாக நின்றார்.


இதெல்லாம் முடிந்து போன கதை. இப்போது மீண்டும் 'மன்கட்' பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் வீரரான வினோ மன்கட்டின் பெயராலயே இந்த முறையிலான அவுட்களை 'மன்கட்டிங்' என்று அழைத்து வருகின்றனர். இனிமல் அப்படி அழைக்காதீர்கள். 'மன்கட்டிங்' என்பதற்கு பதிலாக ரன் அவுட் என்றே அழையுங்கள் என பிசிசிஐக்கு வினோ மன்கட்டின் மகனான ராகுல் மன்கட் மெயில் அனுப்பியுள்ளார்.


1947-48 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் பிரபல வீரரான பில் ப்ரவுன் பௌலர் பந்து வீசுவதற்கு முன்பாகவே க்ரீஸை விட்டு வெளியே வந்து கொண்டே இருக்க, கடுப்பான வினோ மன்கட் அவர் பந்து வீசும்போது பில் ப்ரவுனை மேல் குறிப்பிட்ட முறையில் ரன் அவுட் ஆக்கிவிட்டார். ஒரு முறையல்ல அந்த தொடரிலேயே இரண்டு முறை பில் ப்ரவுனை இதேமாதிரியே அவுட் ஆக்கிவிட்டார். இது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் வினோ மன்கட்டை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்திருக்கின்றனர். அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்களில் இந்த அவுட்டை 'மன்கட்டிங்' என குறிப்பிட்டு பேசியிருக்கின்றனர். அப்போதிருந்து இந்த பெயர் பிரபலமாகிவிட்டது. 




அதன்பிறகு, கிரிக்கெட்டில் அந்த முறையிலான ரன் அவுட்களை 'மன்கட்/மன்கட்டிங்' என அழைக்க தொடங்கிவிட்டனர். ஆனால், வினோ மன்கட் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவான் வீரர். அவரை இப்படி ஒரு முறையில் நினைவு கூறுவது அவரை அவமதிப்பது போன்றதாகும் என இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்படவே செய்கிறது.


மன்கட் இந்தியாவிற்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2109 ரன்களையும் 162 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இந்தியாவில் கிரிக்கெட் வேரூன்ற தொடங்கிய அந்த காலத்திலேயே ஒரு ஆல்ரவுண்டராக ஜொலித்து இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்தார். 1952 இல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றிருந்தது. கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி இதுவே. அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் ஆட தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகே இந்தியாவிற்கு இந்த முதல் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் வினோ மன்கட். அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார். இந்த அசத்தலான பெர்ஃபார்மென்ஸ் இந்தியா தனது முதல் வரலாற்று வெற்றியை பெற முக்கிய காரணமாக இருந்தது.


அதேமாதிரி அந்த சமயத்தில் ஒரு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், 72 ரன்கள் அடித்துவிட்டு பௌலிங்கில் 73 ஓவர்களை வீசிவிட்டு, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் வந்து 184 ரன்களை அடித்திருக்கிறார். மன்கட்டின் உடல் மற்றும் மன வலிமையை பார்த்து அத்தனை பேரும் ஆச்சர்யப்பட்டனர். 




இப்படியான ஒரு ஜாம்பவான் வீரரின் பெயரைத்தான் வெறுமென ஒரு ரன் அவுட்டுக்கு அடையாளமாக வைத்து அவரின் பெருமைகளை சுருக்கிக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் ஒரு உள்ளூர் பெண்கள் தொடரில் இந்த முறையில் ரன் அவுட் செய்யப்படவே, பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதை 'மன்கட்' என குறிப்பிட்டிருந்தது.


அதை பார்த்துவிட்டுதான் வினோ மன்கட்டின் மகனான ராகுல் மன்கட் பிசிசிஐக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி மெயில் அனுப்பியுள்ளார். 'ஐ.சி.சி யையே இப்போதெல்லாம் அதை ரன் அவுட் என்றுதான் அழைக்கிறது. பிசிசிஐ 'மன்கட்' என குறிப்பிடுவது எனது தந்தையை அவமதிக்கும் வகையில் இருக்கிறது' என ராகுல் மன்கட் பிசிசிஐ செயலாளர் கங்குலி மற்றும் கௌரவ செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு மெயில் அனுப்பியுள்ளார்.


சமீபமாக இந்த விஷயத்தில் சர்ச்சைக்குள்ளான அஷ்வினுமே இதே கருத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த முறையிலான அவுட்களை 'மன்கட்' என்று அழைக்காதீர்கள். அவை ரன் அவுட் என அழைக்கப்பட வேண்டும் என்று ரசிகரின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.




வினோ மன்கட்டை ஒரு ரன் அவுட்டிற்கு அடையாளப்படுத்தி அவரது பெருமைகளை சுருக்குவது மன்கட்டிற்கு மட்டும் அவமதிப்பு கிடையாது. அது இந்திய கிரிக்கெட் வரலாறுக்கே அவமதிப்பு செய்யும் செயல். மாற்றம் வர வேண்டும்.