உலககோப்பை டி20 தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அந்த தொடரில் நியூசிலாந்தை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து வெற்றிகண்டது.




இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் இன்று நடைபெற உள்ளது. கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஐ.பி.எல்., உலககோப்பை டி20 என்று தொடர்ந்து ஆடி வந்த விராட்கோலி, ரோகித்சர்மா, பும்ரா, ஷமி, புவனேஷ்குமார் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.


இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ரஹானே தலைமையில் இன்று களமிறங்குகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன்கில்லும், மயங்க் அகர்வாலும் களமிறங்க உள்ளனர். மூன்றாவது வீரராக புஜாரா களமிறங்க உள்ளார். இந்த போட்டியின் மூலம் ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். பேட்டிங்கிற்கு பக்கபலமாக கேப்டன் ரஹானேவும் உள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரை முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, உமேஷ்யாதவ் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்த காத்துள்ளனர்.




உலககோப்பை டி20 இறுதிப்போட்டி தோல்வி, இந்தியாவுடனான டி20 தொடர் தோல்வி என்று நியூசிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணிக்கு கேப்டன் வில்லியம்சனின் வருகை மிகப்பெரும் தன்னம்பிக்கையை அளிக்கும். உலகின் அனைத்து மைதானங்களிலும் சிறப்பாக ஆடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன்களில் வில்லியம்சனும் ஒருவர். அந்த அணியின் பேட்டிங்கிற்கு மூத்த வீரர் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோலஸ், வில் யங் ஆகியோர் பலம் சேர்க்க உள்ளனர். நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு டிம் சவுதி, கைல் ஜேமிசன், மிட்செல் சான்ட்னர், அஜாஸ் படேல் ஆகியோர் சிறப்பான ஒத்துழைப்பை அளிக்க காத்துள்ளனர்.




இந்தியாவும், நியூசிலாந்தும் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியது. அந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்த தோல்விக்கு பிறகு, இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் முதல் டெஸ்ட் என்பதால் வெற்றி பெறுவதற்கே இந்திய வீரர்கள் முனைப்புடன் ஆடுவார்கள். இதனால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண