இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கியிருக்கிறார். யார் இந்த வியாஸ்காந்த்?

 

கிரிக்கெட் ஆடும் அத்தனை நாடுகளுமே தங்களுக்கென ஒரு ப்ரீமியர் லீக் தொடரை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஐ.பி.எல் போல பி.எஸ்.எல், பி.பி.எல், சி.பி.எல் என ஒவ்வொரு நாடும் ப்ரீமியர் லீக் டி20 தொடர்களை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் வெகு சமீபத்தில் இலங்கையும் இணைந்திருக்கிறது. இலங்கை கிரிக்கெட் போர்ட் தங்கள் நாட்டுக்கென லங்கா ப்ரீமியர் லீக் என்ற டி20 தொடரை தொடங்கி நடத்தி வருகிறது. 2020 நவம்பரில்தான் முதல் சீசன் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



 

இந்த லங்கா ப்ரீமியர் லீகில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றிருக்கிறது. இதில், தமிழர்கள் வாழும் பகுதியை மையப்படுத்தி ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் எனும் அணியும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த சீசனில் அந்த அணியின் பெயர் ஜாஃப்னா கிங்ஸ் என மாற்றப்பட்டிருந்தது. இந்த அணியில்தான் விஜயகாந்த் வியாஸ்காந்த் எனும் யாழ்ப்பாண தமிழ் வீரர் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

 

இலங்கையில் தமிழர்களின் நிலையும் அவர்களுக்கான அங்கீகாரமும் எப்போதும் கேள்விக்குரியதாகவே இருந்திருக்கிறது. கிரிக்கெட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. 2009 வரைக்கும் தமிழர்கள் வாழும் பகுதியை சேர்ந்த வீரர்கள் இலங்கை அணிக்காக ஆட முடியாத சூழலே இருந்தது. பல திறமையான வீரர்கள் இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போர்ச்சூழலில் அவர்களால் இலங்கை அணிக்குள் மட்டும் காலடி எடுத்து வைக்கவே முடியவில்லை. யாழ்ப்பாணத்து வீரர்கள் மீது வெளிச்சமே விழாமல் இருந்தது. இந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில்தான் இப்போது வியாஸ்காந்த் சிறப்பாக ஆடி கவனம் ஈர்த்திருக்கிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் முகம்காட்டிய முதல் யாழ்ப்பாண வீரர் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறார்.

 

20 வயதாகும் வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். லெக் ஸ்பின் வீசக்கூடியவர். கடந்த சீசனிலேயே ஜாஃப்னா அணிக்குதான் ஆடியிருந்தார். திசாரா பெராரா தலைமையிலான ஜாஃப்னா அணியில் ஏகப்பட்ட ஸ்டார்கள் இருக்கிறார்கள். வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்சனா என  இலங்கையின் பிரபலமான ஸ்பின்னர்கள் இருப்பதால், வியாஸ்காந்த்துக்கு பெரிதாக வாய்ப்புகளே கிடைக்காது.



 

கடந்த சீசனிலேயே ஒரே ஒரு போட்டியில்தான் ஆடியிருந்தார். ஆனால், அந்த ஒரு போட்டியிலேயே தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். அந்த போட்டியில் இலங்கையில் பிரபல வீரரான மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார். அதிரடி சூரரான ரஸலுக்கு எதிராக 4 பந்துகளை வீசி ஒரு பவுண்டரி கூட கொடுத்திருக்கமாட்டார். இந்த போட்டிக்கு பிறகு மேத்யூஸே வியாஸ்காந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து டீவிட் செய்திருந்தார்.

 

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது சீசனிலும் வியாஸ்காந்த்துக்கு இதுவரை  ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான அந்த போட்டி நேற்றுதான் நடைபெற்றிருந்தது. அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். டாம் பேண்டன், குசால் பெராரா, கீமோ பால் என மூன்று அதிரடி வீரர்களையும் வியாஸ்காந்த் வீழ்த்தியிருந்தார். பந்தை நன்கு காற்றில் தூக்கி வீசி துணிச்சலான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தார்.

 

குறைவான வாய்ப்புகளே கிடைத்தாலும் கிடைக்கிற வாய்ப்புகளிலெல்லாம் வியாஸ்காந்த் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்து கொண்டே இருக்கிறார். யாழ்ப்பாண தமிழர் ஒருவர் இலங்கை வீரர்களோடு இணைந்து ஆடி இலங்கை வீரர் தலைமை தாங்கும் ஒரு அணியை வெல்ல வைப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களை பூரிப்படைய வைத்திருக்கிறது