இந்தியாவில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் லீக் சுற்றில் முடிவில் தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் மோதியது.
டாஸ் வென்ற ஹரியானா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் செய்த ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. ஹரியானா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹிமான்ஷூ ராணா 116 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் யுவராஜ் சிங் 65 ரன்களும் எடுத்திருந்தனர். தமிழ்நாடு அணி சார்பில் டி.நடராஜன் 3 விக்கெட்களும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.
294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆரம்பத்திலேயே விக்கெட் எடுத்து தடுமாற தொடங்கியது. 14 ஓவர்களில் தமிழ்நாடு அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாற, ஜெகதீசன் உடன் பாபா இந்திரஜித் பேட்டிங் ஆட வந்தார். அப்போது, இந்திரஜித் வாய் முழுவதும் டேப் சுற்றப்பட்டு இருந்தது. எதனால் இப்படி வாய் முழுவதும் டேப் சுற்றி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. திடீரென 16வது ஓவரின்போது மருத்துவக் குழு ஒன்று இந்திரஜித்க்கு உதவி செய்தது.
தொடர்ந்து, 21வது ஓவரில் என். ஜெகதீசன் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி 76 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது. அதன்பிறகு, முகத்தில் ஏற்பட்ட காயத்துடன் பாபா இந்திரஜித், தனி ஒரு ஆளாக போராட தொடங்கினார். 71 பந்துகளில் 5 பவுண்டரிகள் உதவியுடன் 64 ரன்கள் எடுத்த பாபா இந்திரஜித் அவுட்டாக, தமிழ்நாடு அணி 47.1 ஓவர்களில் 230 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியால் விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணியால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியவில்லை.
பாபா இந்திரஜித்-க்கு என்ன ஆனது..?
ஹரியானா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின்போது தான் ஏன் வாயில் டேப்புடன் விளையாடினேன் என்பது குறித்து பாபா இந்திரஜித் தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். அதில், “ என் மீதான உங்களது அக்கறைக்கு, வாழ்த்துகளுக்கும் நன்றிகள். மிட் இன்னிங்ஸில் ஐஸ் பாத் எடுக்க சென்றபோது பாத்ரூமில் வழுக்கி விழுந்தேன். குளியலறையில்குப்புற விழுந்ததில் என் முகத்தில் உள்ள மேல் உதடு மற்றும் உதட்டின் உள்பகுதியில் ஆழமான வெட்டுக் காயத்துடன் ரத்தம் கொட்டியது.
எப்படியோ பேட்டிங் செய்ய முடிந்தது, ஆனால் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்லமுடியவில்லை.
மருத்துவமனைக்குச் சென்று தையல் போட்டேன். விரைவில் திரும்ப வந்துவிடுவேன். மீண்டும் ஒருமுறை நன்றி” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, மும்பைக்கு எதிரான காலிறுதி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக இந்திரஜித் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். விஜய் ஹசாரா டிராபியில் இதுவரை அவர் 8 இன்னிங்ஸ்கள் விளையாடு ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 230 ரன்களுக்கு மேல் எடுத்து இந்த பதிப்பில் தமிழ்நாடு அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஐந்து முறை சாம்பியனான தமிழ்நாடு அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஹரியானா அணி. இன்று ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா இடையே நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் ஹரியானா அணி இறுதிப் போட்டியில் மோதுகிறது. இறுதிப் போட்டியானது வருகின்ற சனிக்கிழமை நடைபெறுகிறது.