தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


இந்திய அணி 19.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7விக்கெட்டுகளை இழந்து, 180 ரன்களை சேர்த்தது.  அதிகபட்சமாக ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தார். இந்நிலையில் மழை குறிக்கிட்டது. டக்வர்த் லூயிஸ் முறைப்படி தென்னாப்ரிக்கா அணி 15 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.13.5 ஓவர்களிலேயே தென்னாப்ரிக்கா அணி இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்ரிக்கா அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி நாளை நடைபெற உள்ளது.


இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது 19வது ஓவரின் 4வது பந்தில் களத்தில் இருந்த ரிங்கு சிக் சிக்ஸர் விளாசினார்.  அது லாங் ஆன் மற்றும் மிட் விக்கெட்டுக்கு இடையே ஒரு பயங்கரமான சிக்ஸராக அமைந்தது. பந்து க்கெபர்ஹாவில் உள்ள ஊடகவியலாளர்கள் அறையினைத் தாக்கியது. கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்ட அந்த அறை பந்து பட்டு கண்ணாடி உடைந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.






இந்த நிகழ்வு தொடர்பாக, ரிங்கு சிங் அந்த சிக்ஸர் அடித்தபோது, பிசிசிஐ செய்தித் தொடர்பு மேலாளர்களான ராஜல் அரோரா மற்றும்  மவுலின் பரிக் ஆகியோர்  மீடியாவினருக்காக அமைக்கப்பட்ட கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக இருவரும் ஸ்டார் ஸ்போர்ட்க்கு அளித்த பேட்டியில், இது இந்தியாவுக்காக அவர் அடித்த முதல் அரைசதம்.  இந்த முதல் அரை சதம் அவரது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். பந்து ஒரு பெரிய சத்தத்துடன் வந்து மோதியது. நல்லவேளையாக அந்த கண்ணாடி மூடப்பட்டதால் நாங்கள் தப்பித்தோம். இல்லை என்றால் பந்து எங்கள் மீது பட்டிருக்கும் என மவுலின் பரிக் கூறியுள்ளார். 






அதேபோல் ராஜல் அரோரா கூறுகையில், பந்து முதலில் இவ்வளவு தூரம் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர் அடித்தபோது பந்து கீழே போய்விடும் என நினைத்தேன். நல்ல வேளையாக நாங்கள் அமர்ந்திருந்த அறையின் இரண்டு ஜன்னல்களும் திறந்திருந்தது. பந்து வந்து பட்ட ஜன்னல் மட்டும் மூடி இருந்ததால் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை எனக் கூறியுள்ளார். 


தான் அடித்த சிக்ஸர் மைதானத்தின் ஒரு கண்ணாடியை உடைத்துள்ளதால், ரிங்கு சிங் மைதான பராமரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.