உள்ளூர் கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே போட்டியில் செளராஷ்டிரா-மகாராஷ்டிரா இடையேயான ஃபைனலில் செளராஷ்டிரா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ஜெய்ஷா கோப்பையை வழங்கினார். இந்தப் போட்டியில் வென்றதைத் தொடர்ந்து செளராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட், மைதானத்தில் மண்டியிட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
14 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்
இதன்மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி சாம்பியன் ஆகியுள்ளது. அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் செளராஷ்டிரா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிப் பிடித்த செளராஷ்டிரா
இதையடுத்து 249 ரன்கள் என்ற கடினமான இலக்கை செளராஷ்டிரா அணி விரட்டி பிடித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ஹார்விக் தேசாய் 50 ரன்களும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்களும் எடுத்தனர்.
எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஷெல்டன் ஜாக்சன் மட்டும் நின்று விளையாடி அசத்தினார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் (108 ரன்கள்) விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸிம் காஸி 37 ரன்களும், நவுஷத் ஷேக் 31 ரன்களும் எடுத்தனர். செளராஷ்டிரா சார்பில் சிராக் ஜனி 10 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர் நாயகன்
கடைசி வரை அவர் ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 133 ரன்கள் (5 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) அடித்தார்.
மகாராஷ்டிர அணி சார்பில் முகேஷ் செளதரி, விக்கி ஓஸ்ட்வால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக ஷெல்டன் ஜாக்சனும், தொடர் நாயகனாக ருதுராஜ் கெய்க்வாடும் தேர்வு செய்யப்பட்டார்.