கரூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி, டாஸ் போட்டு போட்டியை துவக்கி வைத்தார். 


 


 




இப்போட்டியில் மொத்தம் 52 அணிகள் கலந்து கொள்கின்றன. அனைத்து போட்டிகளும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு பெறும் அணிக்கு ரூ. 40 ஆயிரம், 3 ம் பரிசு ரூ.30 ஆயிரம்,4 ம் பரிசு ரூ.20 ஆயிரம் பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல் ரவுண்டர் ஆகிய மூன்று பேர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. மொத்தமாக ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. பங்கு கொள்ள உள்ள அணிகள் ஏற்கனவே பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யாத அணிகள் உடனடியாக மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு  தெரிவித்துள்ளனர். கரூர்மாவட்டத்தைச் சார்ந்தவர் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும்.  அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்த போட் டியில் சட்டமன்ற, மாநில, மாநகர, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


 





மேலும், வீரர்களின் வேண்டுகோளை ஏற்று கிரிக்கெட் மட்டையை பிடித்து பந்துகளை விளாசினார். தலா ஒரு ஓவர்  வீசப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மகிழ்ச்சியுடன் விளையாடினார். அப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இன்று துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் 62 அணிகள் பங்கேற்கின்றன.